எனக்கு அவங்க செய்தாங்க, நான் பதிலுக்கு செய்கிறேன் : ஜி.வி.பிரகாஷ்
சென்னையில் நடந்த காந்தி கிருஷ்ணாவின் ‛பிரேக்பாஸ்ட்' பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் வசந்தபாலன் ''வெயில்' படத்தில் தான் அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷை பாராட்டி பேசினார். பிரேக்பாஸ்ட் படத்தில் புதுமுகங்கள் நடித்து இருந்தாலும் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார். கென் கருணாஸ் நடித்த யூத் படத்துக்கும் இசையமைத்துள்ளார். முன்னணி இசையமைப்பாளர்கள் இப்படி செய்யமாட்டார்கள்'' என்றார்.
அதற்கு பதில் அளித்து பேசிய ஜி.வி.பிரகாஷ் ‛‛புதுமுகம் என்று நினைக்காமல் எனக்கு முதல் பட வாய்ப்பை கொடுத்தவர் வசந்தபாலன். அந்த மாதிரி நானும் புதுமுகங்களுடன் வேலை செய்கிறேன். இயக்குனர் ஷங்கர், வசந்தபாலன் ஆகியோர் எனக்கு செய்ததை நானும் செய்கிறேன். நான் அறிமுகம் ஆகி 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. பல புதுமுகங்களுடன் பணியாற்றிவிட்டேன்.
இந்த மேடையில் ஹீரோ பரத் இருக்கிறார். நான் அறிமுகமான வெயில் படத்தில் அவர்தான் ஹீரோ. காதல் நெருப்பின் நடனம் பாடல் ஹிட்டானது. இந்த பட இயக்குனர் காந்தி கிருஷ்ணா நான் வளர்ந்த காலத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த நன்றி உணர்வு எனக்கு இருக்கிறது. மீண்டும், மீண்டும் இளைஞர்களுடன் பணியாற்றுவது உற்சாகம். எனக்கும் எனர்ஜி கிடைக்கிறது. அதனால்தான் ஹாப்பிராஜ் இயக்குனர், கென் ஆகியோருடன் பணியாற்றுகிறேன்'' என்றார்.