உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: மாற்றங்கள் பல கடந்து, மகத்தான வெற்றியைப் பதிவு செய்த எம் ஜி ஆரின் “ரிக்ஷாக்காரன்”

பிளாஷ்பேக்: மாற்றங்கள் பல கடந்து, மகத்தான வெற்றியைப் பதிவு செய்த எம் ஜி ஆரின் “ரிக்ஷாக்காரன்”


தமிழ் திரையுலகில் யாராலும் அசைத்துப் பார்க்க முடியாத ஓர் இடத்தை பிடித்து, திரையில் அதிகார வர்க்கத்தை எதிர்த்து நிற்கும் வீரனாகவும், அடித்தட்டு மக்களின் வேதனையை உணர்ந்த தோழனாகவும், பாட்டாளி வர்க்கத்தின் உழைப்பை பறைசாற்றும் பண்பாளனாகவும் தன்னை அடையாளப் படுத்தும்படியான கதைக் களங்களாக தேர்வு செய்து, அவர்களோடு ஓர் நெருக்கத்தை உருவாக்கும் பாலம் போல, தனது திரைப்படங்களின் தலைப்பும் இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனத்தோடு கலையுலகில் பயணித்து, வெற்றி கண்டவர்தான் எம் ஜி ஆர். “தொழிலாளி”, “படகோட்டி”, “விவசாயி” போன்ற பாட்டாளிகளின் துயரத்தையும், அவர்களது உன்னதத்தையும் உணர்த்துவதாக வந்த அவரது வெற்றித் திரைப்படங்களின் வரிசையில் வந்த மற்றுமொரு வெற்றித்திரைப்படம்தான் “ரிக்ஷாக்காரன்”.

“ரிக்ஷாக்காரன்” திரைப்படத்தை தனது 'சத்யா மூவீஸ்' சார்பில் தயாரித்திருந்ததோடு, கதை, திரைக்கதை பொறுப்பையும் ஏற்றிருந்தார் ஆர் எம் வீரப்பன். ஆரம்பத்தில் இயக்குநர் ஏ காசிலிங்கம் இயக்குவதாக இருந்த இத்திரைப்படத்தின் நாயகன் எம் ஜி ஆர். எம் ஜி ஆர் ஜோடியாக அதிக எண்ணிக்கையிலான வெற்றித் திரைப்படங்களில் நடித்திருந்த ஜெயலலிதாவே இத்திரைப்படத்திலும் நாயகியாக நடிக்க வேண்டும் என்பது எம் ஜி ஆரின் விருப்பமாக இருக்க, படத்தின் தயாரிப்பாளர் ஆர் எம் வீரப்பனோ, வேறு யாரையாவது நாயகியாக நடிக்க வைக்க வேண்டும் என விருப்பம் கொண்டிருந்தார். இறுதியில் ஆர் எம் வீரப்பன் எண்ணியபடியே நடிகை மஞ்சுளா படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

நாயகியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட நடிகை மஞ்சுளாவின் முதல் படமான இத்திரைப்படத்தின் டைரக்ஷன் பொறுப்பும் இயக்குநர் எம் கிருஷ்ணனிடம் சென்றது. 3000 அடி வரை வளர்ந்திருந்த இத்திரைப்படத்தில் 'பார்வதி' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகையின் பங்களிப்பு படக்குழுவினருக்கு திருப்தியளிக்காததால், அந்தக் கதாபாத்திரத்திற்கு அமெரிக்காவில் புலம் பெயர்ந்திருந்த நடிகை பத்மினியை வரவழைத்து, நடிக்கச் செய்து, மீண்டும் அந்தக் காட்சிகளை எல்லாம் படம் பிடித்திருந்தனர். படத்தில் நாயகனும், நாயகியும் பாடுவதாக வரும் கனவுப் பாடலான “அழகிய தமிழ் மகள் இவள்” என்ற பாடல் எம் ஜி ஆருக்குப் பிடிக்காமல் போகவே, அப்பாடலை வேண்டாம் என படத்தின் தயாரிப்பாளரான ஆர் எம் வீரப்பனிடம் எம் ஜி ஆர் கூற, பின் ஆர் எம் வீரப்பன் எம் ஜி ஆரிடம் பேசி, அவரை சம்மதிக்கச் செய்து, அதன்பின் அந்தப் பாடலுக்கான படப்பிடிப்பை நடத்தினர்.

ஏறக்குறைய 40 அடி உயரத்திற்கு பிரமாண்ட செட் அமைத்து, அந்தக் காலத்திலேயே ரூபாய் 1 லட்சம் வரை செலவு செய்து எடுக்கப்பட்ட அந்தப் பாடல்தான் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற பாடலாக மாறியது. மேலும் இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை வென்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமைக்கும் உரியவரானார் எம் ஜி ஆர்.

மாற்றங்கள் பல கண்டு, 29 மே 1971ம் ஆண்டு வெளிவந்த இந்த “ரிக்ஷாக்காரன்” திரைப்படம் தமிழகத்தின் பல திரையரங்குகளில் 100 நாள்களைக் கடந்து ஓடியது. குறிப்பாக சென்னை தேவி பாரடைஸ் திரையரங்கில் 163 நாள்கள் வரை ஓடி, ஒரு மாபெரும் வசூல் சாதனை புரிந்திருந்தது. இத்திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் சென்னையில் 6000 ரிக்ஷாத் தொழிலாளிகளுக்கு எம் ஜி ஆர் தனது சொந்த செலவில் ரெயின் கோட் வழங்கி, அவர்களை ஊக்கப்படுத்தி, சிறப்பித்துமிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !