PUBLISHED ON : ஜன 11, 2026

நான் மருத்துவ மாணவியாக இருந்த போது, 85 சதவீதம் சுக பிரசவம், சிசேரியன் 10 - 15 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும் என்று கற்றுத் தரப்பட்டது. ஆனால், சுக பிரசவத்திற்கான வாய்ப்பு இன்றைய சூழலில் 50 சதவீதம் தான் உள்ளது.
ஏன்?
பாட்டி, அம்மா காலத்தில், உடல் உழைப்பு அதிகம் இருந்தது. அதனால் நார்மல் டெலிவரி அவர்களுக்கு சுலபமானது. தற்போது வீட்டு, வேலைகளைக் கூட நாம் அதிகம் செய்வதில்லை.
கர்ப்பத்தின் போது உடற் பயிற்சி செய்தாலும், அதற்கு முன்பு வரை நம் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதும் முக்கியம். திருமணம் ஆவதற்கு பல ஆண்டுகள் முன்பிருந்தே யோகா, உடற்பயிற்சி செய்வது தினசரி ஒழுங்காக இருந்தால், நார்மல் டெலிவரிக்கான வாய்ப்பு அதிகம்.
நார்மல் டெலிவரி என்பதில், வார்த்தை மட்டுமே நார்மல்; வலி தீவிரமாக இருக்கும். நார்மல் டெலிவரிக்கு வாய்ப்பு இருந்தாலும், சிறிது வலி வந்ததும், என்னால் முடியாது என்று சோர்ந்து விடுகின்றனர் பெண்கள். பிரசவத்தின் போது ஏற்படும் வலியை பொறுத்துக் கொள்ளும் அளவுக்கு மன தைரியம், உடல் வலிமை இருப்பதில்லை.
உணவு
ஆரோக்கியமான குழந்தையின் உடல் எடை 2.8 - 3.2 கிலோவாக இருக்க வேண்டும். இதற்கு கர்ப்ப காலத்தில், தாயின் உணவு முறை ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம்.
தினசரி உணவில், அந்த பருவத்தில் கிடைக்கும் இரண்டு பழங்களை முழுமையாக கடித்து சாப்பிடுவதால், வைட்டமின், நார்ச்சத்து முழுமையாக உடலில் சேரும். பாதாம், முந்திரி போன்ற உலர் விதைகள், தலா இரண்டு, சோயா, முளைகட்டிய பயறு, சுண்டல், பனீர் என்று, தினசரி உணவில் புரதம் அதிகம் இடம் பெற வேண்டும்.
அசைவம் சாப்பிடுபவர்கள், தினமும் இரண்டு அவித்த முட்டை, சிக்கன், மீன் இவற்றை வாழை இலையில் மடித்து வைத்து அவித்து சாப்பிடலாம். இதனால், வாழை இலையில் உள்ள வைட்டமின் ஏ, சி, ஈ, ஆன்டி ஆக்சிடென்ட் , பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் நார்ச்த்துக்கள் உணவில் இறங்கி, இரண்டின் பலனும் சேர்ந்து கிடைக்கும்.
அரிசியை மட்டுமே சேர்க்காமல், கேழ்வரகு, கம்பு, தினை என்று ஏதாவது ஒரு சிறுதானியத்தில் செய்த தோசை, இட்லி, கஞ்சி, உப்புமா தினசரி சாப்பிடலாம்.
உடற்பயிற்சி
நார்மல் டெலிவரி ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில், எல்லா பயிற்சிகளையும் 'யு - டியூபில்' பார்த்து செய்வது தவறு. இதனால் குறைப் பிரசவம், வேறு ஏதேனும் சிக்கல் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். டாக்டரின் ஆலோசனையுடன், பயிற்சியாளரின் கண்காணிப்பில் மட்டுமே செய்ய வேண்டும்.
கர்ப்ப காலத்தில் எந்த உடல் பிரச்னையும் இல்லாமல் இருந்தால், ஐந்தாவது மாதத்தில், காலை, மாலையில் குறைந்தது, 20 நிமிடங்கள் நடைபயிற்சி செய்யலாம். நீர்ச்சத்து குறைவதால் ஏற்படும் தசைப்பிடிப்பைத் தவிர்க்க, நடக்கும் போது அவ்வப்போது சிறிது தண்ணீர் குடிப்பதும் முக்கியம்.
ஆறாவது மாதத்தில் யோகா செய்யலாம். நீச்சல் குளத்தில் நடைபயிற்சியும் செய்யலாம். இடப்பக்கமாக படுத்து, இரவில் 8 - 10 மணி நேரம் உறக்கம், மதியம் ஒரு மணி நேரம் ஓய்வெடுப்பது கட்டாயம்.
ஏன் இடப்பக்கமாக...
குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்க, ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். உட்காரும் போதோ, வலது பக்கமாக படுத்தாலோ இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் மகாதமனியை அழுத்தும். இதனால் கர்ப்பப்பைக்கு ரத்த ஓட்டம் செல்வது குறையும். இடது பக்கமாக படுப்பதால், எவ்வித அழுத்தமும் இல்லாமல், ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
அதற்காக வலது பக்கமாக படுக்கவே கூடாது என்று சொல்லவில்லை. 90 சதவீதம் இடது பக்கம், 10 சதவீதம் வலது பக்கமாக படுக்கலாம்.ஒவ்வொரு முறை திரும்பி படுக்கும் போதும், எழுந்து, உட்கார்ந்து அதன்பின் இன்னொரு பக்கமாக படுக்க வேண்டும் என்று சொல்வது தவறு. திரும்பிப் படுக்கும் போது, மல்லாந்து படுத்து, சில நிமிடங்கள் கழித்து, அடுத்த பக்கம் படுக்கலாம்.
இவற்றை பின்பற்றினால், ஆரோக்கியமான, நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த குழந்தை பிறக்கும்.
டாக்டர் சந்தியா வாசன், இயக்குநர், மகப்பேறு பிரிவு, சிம்ஸ் மருத்துவமனை, சென்னை. 044 - 2000 2001enquiry@siimshospitals.com

