PUBLISHED ON : ஜன 11, 2026

குறிப்பிட்டு சொல்லக்கூடிய பிரச்னை எதுவும் இல்லாமலேயே முதுமையில் மறதி நோய் ஏற்படலாம்.
மூளையில் ஒவ்வொரு நரம்பு செல்லுக்கும் போதுமான ரத்த ஓட்டமும், அவற்றிற்கிடையே தொடர்பும் தேவை. வயதாகும் போது அமலாய்டு புரதம் மூளை செல்களில் சென்று தேங்கலாம்.
இதனால், செல்கள் சிதிலமடைந்து மறதி நோய் வரலாம். முதுமையில் வாதத்தின் தன்மை அதிகமாக இருக்கும். இதனால் உடலில் எப்படி வறட்சி ஏற்படுகிறதோ, அது போல மூளை செல்களில், போதுமான சத்துக்கள் இல்லாமல், வாதம் சூழப்பட்டு வறட்சி ஏற்படுகிறது.
இதைத் தவிர்க்க, உணவு முறையிலும், வாழ்க்கை முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
இளம் சூடான உணவில் நெய் சேர்த்து கொடுத்தால், மூளையின் செல்கள் புதுப்பிக்கப்படும். நார்ச்சத்துக்கள் நிறைந்த கீரைகள், காய்கறிகள், பழங்கள், புரதம் உள்ள பருப்பு வகைகளை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
முதுமையில் உளவியல் பிரச்னைகளான தனிமை, மனப்பதற்றம் இருக்கும். மறதி இருக்கும் போது மனப் பதற்றம், நடப்பதில் தடுமாற்றம் வரும். துாக்கமின்மையால் சிரமப்படுவர்.
இதற்கு ஆயுர்வேதத்தில் நல்ல மருந்துகள் உள்ளன. குறிப்பாக, சாரஸ்வதா அரிஷ்டம், அஸ்வகந்தா போன்றவை நல்ல பலன் தரும். உடல் வறட்சியை நீக்க லட்சுண கிருதம் எனப்படும் பூண்டில் செய்த நெய் மருந்து தரலாம்.
வெளி பிரயோகமாக எண்ணெய் தேய்த்து குளிப்பது சிறந்தது. வஸ்தி போன்ற பஞ்சகர்மா சிகிச்சைகள் செய்வதும் நல்லது.
ஷிரோதாரா சிகிச்சை ஆழ்ந்த துாக்கத்திற்கும், சங்கு பூ, வல்லாரை போன்ற மூலிகைகளில் செய்த மருந்துகள் நினைவாற்றலை மேம்படுத்தும். டாக்டரின் ஆலோசனையுடன் கொடுத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
யோகா, தியானம் செய்வது, புத்தகம் படிப்பதால், மூளையின் செரடோனின் சுரப்பு அதிகரிக்கும்.
மொபைல் போன் உபயோகிக்கும் போது, டோபமைன் அதிகம் சுரந்து, மூளை சோர்வடையவும் வாய்ப்பு உள்ளது.
டாக்டர் கு.சுடர்கொடி, ஆயுர்வேத மருத்துவர், உதவி மருத்துவ அதிகாரி, அரசு ஆரம்ப சுகாதார மையம், திருப்பூர் மாவட்டம்.94448 54993 sudarkkodi78@gmail.com

