PUBLISHED ON : செப் 14, 2025

பெற்றோரில் பல ரகம் உண்டு. குழந்தைக்கு லேசாக மூக்கு ஒழுகினாலே பதறியபடி டாக்டரிடம் ஓடி வருபவர்கள் ஒரு ரகம். இன்னொரு தரப்பினர், குழந்தையிடம் தெரியும் மாற்றங்களை கவனிக்கவே மாட்டார்கள். இரண்டுமே தவறு.
ஐந்து வயது வரை நாமாக எந்த மருந்தையும் குழந்தைக்கு தருவது கூடாது. காய்ச்சல் இருந்தால், டாக்டர் பரிந்துரைத்த 'பாராசிட்டமால்' மருந்தை கொடுத்து விட்டு, வழக்கமாக ஆலோசனை பெறும் குழந்தைகள் நல மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.
குழந்தையிடம் தெரியும் சிறிய மாறுதலையும் கவனிக்கும் பெற்றோர் உடனடியாக டாக்டரிடம் அழைத்து வந்து, என்ன வேறுபாடு தெரிகிறது என்பதை துல்லியமாக சொல்வர். இதனால், எத்தனை தீவிர நோய் பாதிப்பாக இருந்தாலும், முறையான சிகிச்சை தந்து காப்பாற்றி விடலாம்.
நான் அரசு மருத்துவமனையில் பணி செய்தபோது பார்த்திருக்கிறேன். தீவிர சிகிச்சை பிரிவில் 100 குழந்தைகள் இருப்பர். 4 வயது குழந்தை, நாள் முழுதும் துாங்கியதை கவனித்த தாய் என்னிடம் வந்து சொன்னார்.
பரிசோதனை செய்ததில், குழந்தையின் ரத்த சர்க்கரை அளவு 450 எம்.ஜி., /டி.எல்., இருந்தது. தேவையான சிகிச்சை அளித்து குழந்தையை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தோம்.குழந்தையை கவனிப்பதில் தான் இந்த வேறுபாடுகள் இருக்கிறதே தவிர, நோய் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்று சொல்ல முடியாது.
ரத்த சர்க்கரை அளவு அதிகமாகி, அவசர சிகிச்சை பிரிவுக்கு வரும் குழந்தைகளை, 'டயாபடிக் கீட்டோ அசிடோசிஸ்' என்று சொல்வோம்.
இப்படிப்பட்ட குழந்தைக்கு நீண்ட நாட்களாகவே ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்திருக்கும். அதற்கான அறிகுறிகள் தெரிந்தாலும், கவனித்து இருக்க மாட்டார்கள். தொடர்ந்து ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், எதிர்பாராத சமயத்தில் தான் தீவிர பாதிப்புகள் வெளிப்படும்.
காலையில் சுய நினைவுடன் இருந்த குழந்தையின் நிலை மாலையில் மோசமாகலாம்.
அதே போன்று மூளை காய்ச்சல், காலையில் லேசாக காய்ச்சல் இருக்கும். மாலையில் பிரச்னை தீவிரமாகி விடும். சோர்வு, அசவுகரியமாக இருந்த குழந்தையை கவனித்து, உடனடியாக சிகிச்சை செய்திருந்தால், 'ஆன்டிபயாடிக்' மருந்துகள் கொடுத்து தீவிரத்தை குறைத்திருக்க முடியும்.
குழந்தைகளுக்கு பலவித மரபியல் காரணிகளால் 'டைப் - 1' சர்க்கரை கோளாறு வரலாம். மூன்று கிலோ உடல் எடையுடன் பிறந்த குழந்தையின் எடை குறைந்து கொண்டே போகும். உடனே கவனித்தால், இன்சுலின் உதவியுடன் இயல்பாக வாழ முடியும்.
டாக்டர் வித்யா.வி, குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், சிம்ஸ் மருத்துவமனை, சென்னை 044 - 2000 2001, 98777 15223enquiry@simshospitals.com