நாற்பது வயதில் அடிக்கணும் ஆரோக்கியத்துக்கான அலாரம்!
நாற்பது வயதில் அடிக்கணும் ஆரோக்கியத்துக்கான அலாரம்!
PUBLISHED ON : செப் 14, 2025

40 வயதுக்கு பின், ஆரோக்கியத்தின் மீது அக்கறை காட்டாமல், குடும்பத்துக்காக ஓடும் பல பெண்கள், முதுமையில் சிரமப்படுவர் என்கிறார், அரசு மருத்துவமனையின் முன்னாள் டீன் டாக்டர் நிர்மலா.
அவர் கூறியதாவது:
* பெண்கள் குடும்பத்தை கவனித்துக்கொள்ளும் அளவுக்கு, உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் தருவதில்லை. குறிப்பாக, முதுமையை நெருங்கும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
* கிச்சனில் நாள் முழுவதும் வேலை செய்கிறேன், வீட்டு வேலைகளை செய்வதால் உடற்பயிற்சி தேவையில்லை; பணியிடத்தில் மாடிப்படி ஏறி இறங்குகிறேன் என கூறுவது தவறு. இவர்கள் வாக்கிங் அல்லது உடற்பயிற்சிக்கென, தனியாக நேரம் ஒதுக்க வேண்டும்.
* 40 வயதை கடக்கும் போது, மெனோபாஸ் அறிகுறிகள் துவங்கிவிடும். கால்சியம் சத்து குறைவு, வைட்டமின் சத்து குறைபாடு போன்றவை ஏற்படுவதால் கை, கால் வலி, உடல் வலி ஏற்படும். ஊட்டச்சத்து குறைபாடுகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், 50, 60 வயதுகளில் பல்வேறு நோய் பாதிப்புகள் எளிதாக தாக்கும்.
* 40 வயதை கடக்கும் போது, எலும்புகளில் கால்சியம் அடர்த்தி குறைந்து தேய்மானம் ஏற்படும். அதற்கு ஏற்ப, சத்தான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்.மெனோபாஸ் சமயங்களில் தேவையற்ற கோபம், மன அழுத்தம், உறக்கமின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
* பிள்ளைகளுக்கு கல்யாணம் முடிந்தது; இனி கவலை இல்லை என அமர்ந்து விடக்கூடாது. அதன் பிறகுதான், 'ஆக்டிவ்' ஆக இருக்க வேண்டும். ஓரிடத்தில் எப்போதும் அமர்ந்து ஓய்வெடுப்பது, நடமாட்டத்தை அப்படியே முடக்கி விடும்.
* சிறிய வலியாக இருந்தாலும், பரிசோதனை செய்ய தயங்கக்கூடாது. கண், பல், மார்பகம், கர்ப்பப்பை என அனைத்து உடல் பரிசோதனைகளையும், ஆண்டுக்கு ஒரு முறையாவது செய்துகொள்ள வேண்டும்.
* உடலில் வைட்டமின் சத்துக்கள், கால்சியம் சத்து சார்ந்த பரிசோதனை செய்து மருத்துவர்களின் அறிவுரைப்படி, மல்டிவைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.