தொடர்பு எல்லைக்குள் மூளை இருப்பது மறதிக்கு தீர்வு!
தொடர்பு எல்லைக்குள் மூளை இருப்பது மறதிக்கு தீர்வு!
PUBLISHED ON : செப் 14, 2025

மறதி நோயான -'டிமென்ஷியா' உட்பட நரம்பியல் கோளாறுகளால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
ஏன்?
'ஹோம் மேக்கர்ஸ்' என்று சொல்லும் வீட்டை மட்டும் நிர்வகிக்கும் பெண்கள் மட்டுமல்ல, அலுவலகம் செல்பவர்கள், சுய தொழில் செய்பவர்கள் ஏன் பெரிய பதவியில் இருக்கும் பெண்களில் மிகச் சிலர் தவிர, மற்றவர்கள் புதிதாக எதுவும் கற்பதில்லை.
வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின், பேரன், பேத்தி என்று நேரத்தை செலவு செய்கின்றனரே தவிர, மூளைக்கு வேலை தருவதில்லை. மூளையை சுறுசுறுப்பாக வைத்தால் டிமென்ஷியா வராது.
எப்படி?
மூளையில் கோடிக்கணக்கான நரம்பு செல்கள் உள்ளன. இந்த நரம்பு செல்கள் தனித்தனியாக இயங்காது. ஒன்றுடன் ஒன்று தொடர்பு எற்படுத்திக் கொண்டு தான் இயங்கும்.
இந்த நரம்பு செல்களில் 30 சதவீதம் மட்டுமே இயல்பாக தொடர்பில் இருக்கும். மற்றவை செயலற்ற நிலையில் இருக்கும். இவற்றிற்கு இடையில் எந்த அளவு தொடர்பை எற்படுத்துகிறோமோ, அந்த அளவு மூளை ஆரோக்கியமாக இருக்கும்.
தொடர்பு எல்லைக்குள் வர...
நிறைய புத்தகம் வாசிக்கலாம். கணக்குகள் போடலாம். புதிருக்கு விடை காணலாம். தினமும் எதோ ஒரு புது விஷயத்தைக் கற்றுக் கொள்ளலாம்.
வலது, இடது என இரு மூளைகள் உள்ளன. தேவையான நினைவுகளை பதித்து வைத்திருக்கும் பகுதி வலது மூளை. தினமும் செய்யும் வேலைகளை வலது மூளையின் 'செரிபல்லம்' எனற பகுதி பதித்து நினைவில் வைத்துக் கொள்ளும்.
இடது மூளை தான் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் பகுதி. பகுத்தறியும் திறன் கொண்ட 'அனலிட்டிக்கல்' மூளை. புதிது புதிதாக கற்கும் போது, புதிய நியுரோ செல்களுக்கிடையே தொடர்புகள் உருவாக்கி, புத்திசாலித்தனத்தை அதிகரிக்கச் செய்யும்.
படித்ததையே திரும்ப திரும்ப படித்தால், வலது மூளையில் நினைவாற்றல் மட்டுமே பெருகும். இத்துடன் சேர்த்து உடல் உழைப்பும் அவசியம். தினமும் நான்கைந்து கி.மீ., நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
வீட்டு வேலைகள் செய்வதை உடல் உழைப்பாக கருத முடியாது. காரணம், சமைப்பது, வீட்டை சுத்தம் செய்வது போன்ற வீட்டு வேலைகளை தினமும் 'ரிலாக்ஸ்'டாக செய்யும் போது, உடல் அதற்கு பழகி விடும். பெரிதாக கலோரி வீணாகாது.
டிமென்ஷியா அறிகுறிகள்
ஒரு இடத்தில் வைத்த பொருளை மறப்பது, கையில் வைத்துக் கொண்டே தேடுவது, முதல் நிலை.
சாப்பிட்ட சிறிது நேரத்தில் சாப்பிட்டோமா இல்லையா என்று நினைவில் வராது. காலை உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில், என்ன சாப்பிடீர்கள் என்று கேட்டால் நினைவில் இருக்காது. இது அடுத்த நிலை. இந்த அறிகுறிகள் ஓராண்டு இருக்கலாம்.
அடுத்த நிலையில், சிறுநீர் கழிக்க பாத்ரூம் செல்ல வேண்டும் என்பதை மறந்து வேறு அறைக்கு செல்வது, தீவிர நிலையில், வீட்டை விட்டு வெளியில் சென்றால் திரும்ப வீட்டிற்கு வரத் தெரியாது.
குழந்தைகளின் பெயர் மறந்து விடும். கடைசி கட்டத்தில் வாயில் வைத்த உணவை விழுங்க கூடத் தெரியாமல், தன்னையே மறந்துவிடுவார்கள். இப்படி ஒவ்வொரு கட்டமாகத்தான் தீவிரமாகும்.
வருமுன்...
ஆரம்ப நிலையிலும் டிமென்ஷியா, அல்சைமர்ஸ் நோய்களுக்கு மருந்துகள் உள்ளன. ஆனால் 10, 20 சதவீதம் மட்டுமே குணமாவது தெரியும்.நரம்பியல் கோளாறுகளை வருமுன் தடுப்பதே நல்லது.நரம்பு செல்கள் சிதைந்தால், அதை பழைய நிலைக்கு கொண்டு வரவே முடியாது.
மறதி தவிர...?
வயதாகும் போது நரம்பு செல்கள் சிதைவதால், அல்சைமர்ஸ், பார்க்கின்சன்ஸ் போன்ற நோய்களும் வரலாம். அல்சைமர்ஸ் நோயும் பெண்களை ஆண்களை விட மூன்று மடங்கு அதிகம் பாதிக்கிறது.
பேராசிரியர் டாக்டர் ரங்கநாதன் ஜோதி, இயக்குநர்,நரம்பியல் பிரிவு, காவேரி மருத்துவமனை, சென்னை 044 4000600, 78711 99089info@kauveryhospital.com