உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: 1964ல் எம்ஜிஆர், சிவாஜி படங்கள் உச்சகட்ட மோதல் : 7 படங்கள் ரிலீஸ்

பிளாஷ்பேக்: 1964ல் எம்ஜிஆர், சிவாஜி படங்கள் உச்சகட்ட மோதல் : 7 படங்கள் ரிலீஸ்

1964ம் ஆண்டு, தமிழ்த் திரையுலகில் மிக முக்கியமான ஆண்டு. இந்த வருடத்தில் எம்ஜிஆர் நடித்த ஏழு படங்கள் ரிலீசாகின. எம்.நடேசன் இயக்கத்தில் 'என் கடமை' படத்தில் நடித்தார் எம்ஜிஆர். சுப்பாராவ் இயக்கத்தில் 'தாயின் மடியில்' படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் வெற்றி பெறவில்லை. தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில், 'தொழிலாளி' படம் சுமாராகத்தான் ஓடியது.

பி.மாதவன் இயக்கத்தில் 'தெய்வத்தாய்' படத்தில் நடித்தார். இந்த படம் பெரிய வெற்றி பெற்றது. டி.பிரகாஷ்ராவ் இயக்கத்தில், எம்ஜிஆர் நடித்த 'படகோட்டி' மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அந்த வருடத்தில் எம்ஜிஆர் நடித்த கலர் படமும் இது மட்டும்தான். 'வேட்டைக்காரன்' வெற்றி பெற்றது. டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில், 'பணக்கார குடும்பம்' வெற்றி பெற்றது. எம்ஜிஆரின் 7 படங்களில் 5 படங்கள் எம்ஜிஆருக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தன.

சிவாஜி கணேசனும் 64ம் ஆண்டில், ஏழு படங்களில் நடித்தார். கே.சங்கரின் இயக்கத்தில், 'ஆண்டவன் கட்டளை' யும், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில், நடித்த 'கைகொடுத்த தெய்வம்' படமும், ஏ.பீம்சிங் இயக்கத்தில் 'பச்சை விளக்கு' படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஏபி.நாகராஜன் இயக்கத்தில், சிவாஜியும் சாவித்திரியும் நடித்த 'நவராத்திரி' திரைப்படம் இந்த வருடம்தான் வெளியானது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'கர்ணன்' படமும் வெற்றியை பெற்றது. ஆனால் 'புதிய பறவை' மிகப்பெரிய வெற்றி பெற்றது. பி.ஆர்.பந்துலுவின் 'முரடன் முத்து' சுமாராகத்தான் ஓடியது. சிவாஜி நடித்த படத்தில் கர்ணனும், புதிய பறவையும் வண்ணப் படங்கள். சிவாஜியின் 7 படங்களில் முரடன் முத்து தவிர்த்து மற்ற 6 படங்களும் ஹிட்டாகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !