பேஸ்புக்கில் எனக்கு கணக்கு இல்லை, பணம் கட்டி ஏமாற வேண்டாம் : ரித்திகா சிங் எச்சரிக்கை
'இறுதிச்சுற்று', 'ஆண்டவன் கட்டளை', 'வேட்டையன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை ரித்திகா சிங். சமீபகாலமாகவே பிரபல நட்சத்திரங்களின் பெயரில் போலி வலைதள பக்கங்கள் சிலரால் நடத்தப்படுவதும், சிலர் ஏஐ மூலமாக அவர்களது போலியான புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்புவதும், இது குறித்து சம்பந்தப்பட்ட பிரபலங்கள் புகார் அளிப்பதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் நடிகை ரித்திகா சிங் தனது ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக, எனக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும்தான் கணக்கு இருக்கிறது. பேஸ்புக்கில் எனக்கு கணக்கு இல்லை என்று கூறியுள்ளார்.
இதற்கு காரணம் ரித்திகா சிங் பெயரில் பேஸ்புக்கில் இயங்கி வரும் கணக்கு ஒன்றுக்கு பல பேர் சப்ஸ்கிரிப்ஷன் என்கிற பெயரில் பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்து வருவதுதான். இந்தத் தகவல் ரித்திகா சிங்கின் கவனத்திற்கு வந்ததுமே இது குறித்து ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை உஷார்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, ஆரம்பத்தில் இதை நான் பெரிதுபடுத்த வேண்டாம் என்று நினைத்தேன், இது தானாகவே நின்றுவிடும் என்று கருதினேன். ஆனால் நிற்கவில்லை. எனது அடையாளத்தை தவறாக பயன்படுத்தி என்னை அவமதிக்கும் அளவுக்கு காரியங்கள் சென்று விட்டன. நான் தவறு எதுவும் செய்யாத நிலையில் என் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள நானே முன்வந்து பேச வேண்டி உள்ளது எனக்கு வருத்தம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.