பொன்னியின் செல்வன் 2விற்கு பிறகு ஐஸ்வர்யா ராய் சினிமாவை தவிர்ப்பதேன்?
ஒரு காலத்தில் இந்தியாவின் முதன்மை நடிகையாகத் திகழ்ந்தவர் ஐஸ்வர்யா ராய். திருமணம் என்பது ஒரு நடிகையின் திரையுலக வாழ்க்கைக்கு முடிவல்ல என்பதை நிரூபித்த அவர், திருமணத்திற்குப் பிறகும் முன்னணி நடிகையாக வலம் வந்து முக்கிய திரைப்பட வாய்ப்புகளைப் பெற்று வந்தார். இன்று பல நடிகைகளும் திருமணத்திற்குப் பிறகும் தங்கள் திரைப் பயணத்தைத் தொடர இவரே வழிகாட்டியாக இருந்துள்ளார்.
இருப்பினும், சமீபகாலமாக திரைப்படத் துறையில் அதிகம் கவனம் செலுத்தாமல் ஒதுங்கியே இருக்கிறார் ஐஸ்வர்யா ராய். இந்நிலையில் நவம்பர் 1ம் தேதியான நேற்று ஐஸ்வர்யா ராய் தனது 53 வது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். மேலும், அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக எந்தவொரு புதிய படத்திலும் ஒப்பந்தமாகவில்லை. மணிரத்னம் இயக்கத்தில் 2023-ம் ஆண்டில் நடித்த பொன்னியின் செல்வன் 2 படமே அவரது கடைசி படமாக உள்ளது.
தற்போதைக்கு, வணிகப் பிராண்டுகளின் விளம்பரங்கள் மற்றும் சில பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் திரைப்படங்களில் நடிக்காதது குறித்து தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அவரது வயது மற்றும் தோற்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இதற்கு காரணம் என்கிறார்கள். அதனால்தான் தனது மகளான ஆராத்யாவுடன் நேரத்தை செலவழித்துக் கொண்டு, தனது தொழில்முறைப் பொறுப்புகளைக் கவனித்தபடி அவர் இருப்பதாக கூறப்படுகிறது.