கன்னட நடிகர் தர்ஷன் வழக்கில் புதிய திருப்பம் ; பல்டி அடித்த சாட்சி
கன்னட நடிகர் தர்ஷன் இரண்டு வருடங்களுக்கு முன்பு தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடா என்பவருக்கு, ஆபாச குறுஞ்செய்தி அனுப்பினார் என்கிற காரணத்திற்காக தனது ரசிகரான ரேணுகா சுவாமியை அடித்துக் கொன்றார் என குற்றம் சாட்டப்பட்டு தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார். நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட இன்னும் 16 பேரும் இந்த வழக்கில் தற்போது சிறையில் இருக்கின்றனர். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கில் முக்கிய சாட்சியாகக் கருதப்பட்ட புனித் என்கிற நபர் தற்போது தான் போலீசாரிடம் அளித்த சாட்சியத்தில் இருந்து பல்டி அடித்து நீதிமன்றத்தில் வேறுவிதமாகக் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்துக் கூறப்படுவதாவது : பெங்களூருவில் உள்ள பட்டினகரே பகுதியில் உள்ள செட் பகுதியில் வேலை செய்து வந்த புனித் என்பவர் ரேணுகா சுவாமி கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் அன்று தான் வேலைக்குச் சென்றபோது அங்கு ஏற்கனவே மூன்று பேர் இருந்ததாகத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மேலும் காரில் 5 பேர் அங்கு வந்ததாகவும், ஆனால் அவர்கள் யார் என்று தனக்குத் தெரியாது என்றும் கூறினார். மேலும் காணொளி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தன்னால் அடையாளம் காண முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சம்பவம் நடந்ததாகச் சொல்லப்பட்ட அன்று மாலை 6:30 மணிக்கு உணவு அருந்திவிட்டு மாதேஸ்வரன் மலைக்குச் சென்றுவிட்டதாகவும், அதற்குப் பின்னர் என்ன நடந்தது என இன்று தனக்குத் தெரியாது என்றும் நீதிமன்றத்தில் அவர் தெரிவித்தார். முன்னதாக அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்திற்கு மாறாக நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளதால் இந்த விசாரணையில் பல்டி அடித்துவிட்டார் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் பிரசன்னா பி குமார் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்த வழக்கில் ஏதாவது மாற்றம் ஏற்படுமா என்பதை இனிவரும் நாட்களில் தான் பார்க்க வேண்டும்.