உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் காலை 6 மணி காட்சி : அனுமதி அளிப்பாரா முதல்வர்… ?

மீண்டும் காலை 6 மணி காட்சி : அனுமதி அளிப்பாரா முதல்வர்… ?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள், சில பிரம்மாண்டப் படங்கள் ஆகியவை வெளியாகும் போது அதிகாலை காட்சிகள், காலை 6 மணி காட்சிகள் என சில வருடங்களுக்கு முன்பு வரை நடந்து வந்தது.

அஜித் நடிப்பில் 2023 பொங்கலுக்கு வெளிவந்த 'துணிவு' படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சியின் போது லாரி மீது நடனமாடிய போது கீழே விழுந்து இறந்து போனார் அஜித் ரசிகரான 19 வயரே ஆன பரத்குமார்.

அதன்பின் அப்படியான அதிகாலை காட்சிகள், காலை 6 மணி காட்சிகளுக்கு அப்போதைய திமுக அரசு தரப்பில் வழங்கப்பட்டு வந்த அனுமதி நிறுத்தப்பட்டது. காலை 9 மணிக்கு மட்டும் சிறப்புக் காட்சிகளை நடத்த அனுமதி வழங்கினர்.

இந்த வருட மே மாதத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு நடிகர் விஜய் முதல்வராகப் பொறுற்பேற்ற பின் காலை 9 மணி காட்சிகளுக்கான அனுமதி என்பது ஒரு வாரத்திற்கு நடத்திக் கொள்ளலாம் என்ற நிரந்தர அரசு ஆணை மூலம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் தமிழ்த் திரையுலகினருடன் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன் கலந்து கொண்டார். அவரிடம் காலை 6 மணி காட்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என அனைத்து திரையுலக சங்கங்களின் சார்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முதல்வர் விஜய்யுடன் பேசிவிட்டு ஒப்புதல் அளிப்பதாக அமைச்சர் தெரிவித்ததாக திரையுலக சங்கத்தினர் தெரிவித்தனர்.

சினிமாவில் நடித்த போது விஜய்யின் திரைப்படங்களுக்கும் அதிகாலை காட்சிகள் நடந்துள்ளன. அவர் முதல்வர் ஆன பின்பு நடித்து கடைசியாக வெளிவந்த 'ஜனநாயகன்' படத்திற்குக் கூட அதிகாலை காட்சிகளுக்கும், காலை 6 மணி காட்சிகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

திரையுலகினரின் மீண்டும் இந்த அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கான அனுமதியை முதல்வர் விஜய் வழங்குவாரா அல்லது பழைய நிலையே தொடரட்டும் என சொல்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடமும் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !