கோடைகாலக் காற்றில் கலந்த இசைஞானியின் இடது சுரம் சதானந்தம்!
தமிழ் சினிமா சமீபகாலமாக பல இசைக் கலைஞர்களை இழந்துவரும் நிலையில், சதா மாஸ்டர் என்று அன்பாக அழைக்கப்படுகிற சதானந்தம் தனது 79 வது வயதில் தனது 50 ஆண்டுகால உயிர் நண்பர்களான கிதார் கம்பிகளை விட்டுப் பிரிந்திருக்கிறார்.
இளையராஜா 'அன்னக்கிளி' மூலம் சிறகடிக்கத் தொடங்கியதற்கு முன்பே அவருடன் பயணிக்கத் தொடங்கியவர் சதா மாஸ்டர். ராஜாவே கோல்ட் மெடல் வாங்கிய விரல் தேர்ந்த கிதாரிஸ்ட் எனும்போது, தனது ஆஸ்தான கிதாரிஸ்டாக சதாவை தேர்வு செய்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவரை அரவணைத்துக் கொண்டது ஒன்றுபோதும் சதா எவ்வளவு பெரிய மாஸ்டர் என்று சொல்வதற்கு.
ஒரு இசையமைப்பாளராக ராஜா எவ்வளவு கறாரானவர் என்பதை யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வாசிப்பின்போது ஒரு சிறிய தவறு செய்தாலும் ராஜா நெற்றிக்கண்ணைத் திறந்துவிடுவார். அதில் இரு செல்லப்பிள்ளைகளுக்கு விதிவிலக்கு. இரண்டாமவர் பாடகரும் புல்லாங்குழல் கலைஞருமான அருண்மொழி என்கிற நெப்போலியன். முதலாமவர் சதா மாஸ்டர்.
தன்னைவிட 5 வயது இளையவரான சதா மாஸ்டரை தனது மூத்த சகோதரர் போலவே நடத்தினார் ராஜா. இந்த மரியாதைக்கு மிகப் பெரிய ப்ளாஷ்பேக் உண்டு.
சதா மாஸ்டரின் தந்தை சுதர்சனம் 1940 - 60கள் வரை புகழ்பெற்ற இசையமைப்பாளர். ஏவிஎம் நிறுவனத்தின் ஆஸ்தான இசையமைப்பாளர். குறிப்பாக, நாம் இருவர் (1947), வாழ்க்கை (1949), பராசக்தி (1952) ஆகிய படங்கள் அவரது இசைப் பயணத்தில் குறிப்பிடத்தக்கவை.
சதா மாஸ்டர் குறித்து இசை நிகழ்ச்சி மேடைகளில் பெருமையுடன் குறிப்பிடும் ராஜா, தான் வாய்ப்பு தேடிய காலங்களில் பலமுறை சதா மாஸ்டரின் இல்லத்தில் உணவு உண்டதை நெகிழ்வுடன் பகிர்ந்திருக்கிறார்.
இந்த நீண்ட கால நட்பு ஒருபுறமிருக்க, ராஜா கொடுத்த மிகக் கடினமான நொட்டேஷன்களைக் கூட அநாயசமாக, அதே சமயம் அதிவேகமாக வாசிக்கும் திறன் கொண்டவர் சதா. கிடாரில் எத்தனை வகையுண்டோ அத்தனை கருவிகளையும் வாசிப்பதில் மிகப் பெரிய எக்ஸ்பர்ட் இந்த சதா மாஸ்டர்.
ராஜாவிடம் பணியாற்றிய கலைஞர்களில் பலர் அவரை விட்டுபிரிந்து சென்று பணிபுரிய விரும்புவதேயில்லை. 'என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன்' என்று ராஜா பாடினால், இவர்களது எசப்பாட்டு 'உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்' என்பதாகவே இருக்கும். அதில் மிக முக்கியமானவர் சதா. இந்த 50 ஆண்டுகளும் ராஜாவின் நிழல்போலவே தொடர்ந்தவர் சதா. ராஜாவின் இசைக் கச்சேரிகளும் இவர் இல்லாமல் நடைபெறாது.
ராஜா இதுவரை இசையமைத்திருக்கும் எட்டாயிரத்துச் சொச்ச பாடல்களில் பாதிப்பாடல்கள் கிடார் இசைத்துணுக்குகள் அதிகம் கொண்டவை. அதில் 90 சதவிகித பாடல்கள் சதா மாஸ்டர் வாசித்தது. இதை ராஜாவே பல மேடைகளில் பெருமிதம் பொங்கப் பகிர்ந்திருக்கிறார். ராஜாவின் பின்னணி இசைகளிலும் பெரும் பங்களிப்பு செய்தவர் சதா. 'மவுன ராகம்' படத்தின் தீம் மியூசிக்கை சதாவை வாசிக்கச் சொல்லி மேடைகளில் கைதட்டி ரசிப்பார் ராஜா.
மிகச் சமீபகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் தன்னிடம் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருந்த மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்தபடியே இருந்த சதா, யூடியூப் தளங்கள் மூலமாகவும் வகுப்பு எடுத்து தனது கலையை மற்றவர்களுக்கும் கடத்தினார். அந்த கற்றுக்கொடுத்தலில் பொறுமையின் உச்சத்தைப் பார்க்கலாம்.
அந்த வகுப்புகளில் அவர் அதிகம் நேசித்து வாசிக்கும் பாடல்கள்
பூவே செம்பூவே [ சொல்லத்துடிக்குது மனசு]
தென்றல் வந்து என்னைத் தொடும் [படப்பெயரும் அதே]
ஆகாய வெண்ணிலாவே [அரங்கேற்ற வேளை ]
இந்த மான் உந்தன் சொந்தமான் [கரகாட்டக்காரன்]
என் இனிய பொன் நிலாவே [மூடு பனி ]
இளையநிலா [பயணங்கள் முடிவதில்லை]
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் [புன்னகை மன்னன்]
பொத்தி வச்ச மல்லிகை மொட்டு [மண் வாசனை]
வானெங்கும் தங்க விண்மீன்கள் [மூன்றாம் பிறை]
ஆனால் இப்பாடல்களையெல்லாம் தாண்டி அவர் அதிகம் நேசித்து, அடிக்கடி வாசித்துக் காட்டும் பாடல் 'பன்னீர் புஷ்பங்கள்' படத்து கோடைகாலக் காற்றே' பாடலை.
அப்பாடலை மீட்டிய மெல்லிய விரல்கள் அதே கோடைகாலக் காற்றில் கலந்து கரைந்துவிட்டன. இசைஞானி ராஜாவின் தளபதியாக, அவரது இடது கரமாக, சுரமாக இருந்த மாஸ்டரின் இழப்பு பேரிழப்புதான். ஆனால் காற்றின் தேசமெங்கும் அவரது கிடார் இசை காலம்தோறும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.