காலை 6 மணி முதல் இரவு 2 மணி வரை படங்கள் திரையிட அனுமதி வேண்டும் : அமைச்சரிடம் கோரிக்கை
தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில், சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ் திரைத் துறையினருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
திரையரங்குகளில் வெளியாகும் தமிழ்ப் படங்களை ஓடிடி தளங்களில் வெளியிடுவதற்கான கால அவகாசத்தை 8 வாரங்களாக நீட்டிப்பது, சிறு முதலீட்டுத் திரைப்படங்களை ஆதரிக்கும் வகையில், தமிழக அரசின் சார்பில் புதிய ஓடிடி தளம் அமைப்பது, நிலுவையில் உள்ள முந்தைய ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் மற்றும் சிறு பட்ஜெட் படங்களுக்கான மானியத் தொகைகளை வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் காலை 6 மணி முதலே திரைப்படக் காட்சிகள் தொடங்குகின்றன. அதேபோன்று தமிழ் நாட்டிலும் அனுமதி அளிக்க வேண்டும். நள்ளிரவு 2 மணிக்குள் அனைத்துக் காட்சிகளையும் முடிக்கும் வகையில் அனுமதி வழங்க வேண்டும். இதன்மூலம் ஒரு நாளில் 5 அல்லது 6 காட்சிகளைத் திரையிடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஒரே நேரத்தில் அதிக திரைப்படங்கள் வெளியாகும்போது அவற்றுக்குப் போதுமான காட்சிகளை ஒதுக்க முடியும் என்றும் அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
போலியான வசூல் விளம்பரங்களை தடுக்கும் வகையில் திரையரங்கில் ஒவ்வொரு காட்சியும் முடிந்தவுடன் அதன் டிக்கெட் வசூல் விவரங்கள் ஆன்லைன் வாயிலாகத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகிய மூன்று தரப்பினருக்கும் கிடைக்கும் வகையில் புதிய நடைமுறையைக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “திரைத்துறையினர் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் சுமார் 90 சதவீத கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. முதலமைச்சருடன் கலந்தாலோசித்து இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணைகள் மற்றும் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்” என தெரிவித்தார்.