உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராஷ்மிகாவை தமிழர் என்று குறிப்பிட்டுப் பின்னர் திருத்திய ஜாவேத் அக்தர்

ராஷ்மிகாவை தமிழர் என்று குறிப்பிட்டுப் பின்னர் திருத்திய ஜாவேத் அக்தர்


இந்தியத் திரையுலகத்தில் பிரபலமாக இருப்பவர் கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா. கர்நாடக மாநிலம் குடகு பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டது அவரது குடும்பம்.

சமீபத்தில் 'காபி வித் கரண்' நிகழ்ச்சியில் ராஷ்மிகாவிடம் அவர் சந்தித்த விமர்சனங்கள் குறித்து கரண் ஜோஹர் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த ராஷ்மிகா, தனது ஹிந்தி உச்சரிப்பில் தென்னிந்திய உச்சரிப்பு இருப்பதாக விமர்சனம் எழுந்தது. தென்னிந்தியாவைச் சேர்ந்தவள் என்பதால் அப்படி இருப்பது இயல்புதானே என்றார். மேலும், தனது ஆரம்ப கால பயணத்தில் நடிப்பு, மொழி, உச்சரிப்பு போன்ற விமர்சனங்கள் நிறைய வந்தன. அதையெல்லாம் கண்டுகொண்டதில்லை.

விரும்பினால் டப்பிங்கை வேறு ஒருவரை வைத்து செய்து கொள்ளுங்கள் என்று இயக்குனர்களிடம் சொன்னதாகவும் கூறியிருந்தார். இருந்தாலும் இயக்குனர்கள் தன்னையே பேச வைத்ததைப் பெருமையாகக் கருதுவதாகவும் ராஷ்மிகா பதிலளித்திருந்தார்.

அது குறித்து பிரபல கவிஞரும், வசனகர்த்தாவுமான ஜாவேத் அக்தர், ராஷ்மிகாவுக்கு ஆதரவாக, “தமிழ் நடிகை ராஷ்மிகாவின் தமிழ் உச்சரிப்பு குறித்து யாருக்கேனும் சிக்கல் இருந்தால், அவர்களுக்குத் தமிழ் மொழியில் சில வரிகளை வாசிக்கக் கொடுத்துப் பார்ப்போம்; உலகின் மிகத் தொன்மையான மொழியான தமிழை அவர்கள் எவ்வளவு சிறப்பாக உச்சரிக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளட்டும். இத்தகைய போலியான, ஆதாரமற்ற மொழி மேலாதிக்க மனப்பான்மை ஏற்புடையதல்ல,” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

அவர் ராஷ்மிகாவைத் தவறுதலாக தமிழ் நடிகை என்று குறிப்பிட்டதற்கு பலரும் அவர் தமிழர் அல்ல கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்று விமர்சித்தனர்.

அதற்கு ஜாவேத் அக்தர், “நான் தவறு செய்துவிட்டேன், அதற்காக வருந்துகிறேன். எனக்கு அவரைத் தனிப்பட்ட முறையில் தெரியாது. தற்செயலாக, நான் பார்த்த அவருடைய ஒரே திரைப்படம் தமிழ்ப் படம்தான். ஆனால், தமிழ், தெலுங்கு, மலையாளம் அல்லது கன்னடம் என்பது இங்கு முக்கியமல்ல. ஒருவர் நம் மொழியைப் பேசும்போது, அதில் ஒரு குறிப்பிட்ட உச்சரிப்பு இருந்தாலும், அதை நாம் பாராட்டத்தான் வேண்டும். சொல்லப்போனால், நம்மில் எத்தனை பேர் ஆங்கிலத்தை மிகச் சரியான உச்சரிப்புடன் பேசுகிறோம் ? ஒரு ஆங்கிலேயர் நம்முடைய உச்சரிப்பை வைத்து நம்மை கேலி செய்தால், நமக்கு எப்படி இருக்கும் ?,” என்று விளக்கம் அளித்துள்ளார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !