பிளாஷ்பேக்: தென்னிந்தியாவின் முதல் டெக்னிக்கலர் திரைப்படத்தைத் தந்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்
ஏ வி எம் என்ற கலையுலகக் கனவுக் கூடம் வழங்கிய கலைஞர்கள் பலரில் முதன்மையானவரும், ஏ வி மெய்யப்ப செட்டியார் அவர்கள் இயக்கிய “வாழ்க்கை” என்ற திரைப்படத்தில் அவரது உதவியாளராக பணிபுரிந்தவருமான ஒரு ஒப்பற்ற திரைக்கலைஞர்தான் இயக்குநர் எம் வி ராமன். 1930களின் பிற்பகுதியில் ஒரு எடிட்டராக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்து, பின் ஒரு இயக்குநராக, தயாரிப்பாளராக உயர்வு பெற்றவர் இவர். “ஜீவிதம்”, “லட்கி”, “சங்கம்”, “பெண்”, “அதிசயப் பெண்”, “பட்டணத்தில் பூதம்” என தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பல காவிய வெற்றித் திரைப்படங்களைத் தந்த இவர், தனது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாக்கி வெளியிட்ட மற்றும் ஒரு போற்றுதலுக்குரிய திரைப்படமாக வந்ததுதான் “கொஞ்சும் சலங்கை”.
இசைக் கலைக்கும், நடன கலைக்கும் முக்கியத்துவம் அளித்து தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், அக்காலத்திலேயே அதிக பொருட் செலவில், மிகப் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட ஒரு கலைப்படைப்பாகப் பார்க்கப்பட்டது. படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான எம் வி ராமன் அவர்களின் நேரடிப் பார்வையில், லண்டனில் உள்ள ஆய்வகத்தில் உருவாக்கம் செய்யப்பட்ட இந்தத் திரைப்படம்தான் தென்னிந்தியாவின் முதல் டெக்னிக்கலர் திரைப்படம் என்ற பெருமைக்கும் வித்திட்டது.
நமது தொழில்நுட்ப கலைஞர்களாலும் வெளிநாட்டு திரைப்படங்களுக்கு இணையான ஒரு டெக்னிக்கலர் திரைப்படத்தை வழங்க முடியும் என்பதை அறைகூவலிட்டுச் சொன்ன ஒரு கலைப்படைப்பாக வந்ததுதான் இந்த “கொஞ்சும் சலங்கை”. இந்தத் திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் ஆங்கிலத் துணையுரை கொண்டு திரையிடப்பட்டு, உலகளவில் பல மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்ட ஒரு திரைப்படமாகவும் அறியப்பட்டது.
நாதஸ்வரக் கலைஞராக படத்தின் நாயகன் ஜெமினிகணேசனும், அவருக்கு ஜோடியாக நடிகை சாவித்திரியும் தங்களது இயல்பான நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்திருந்தனர். குறிப்பாக இசையமைப்பாளர் எஸ் எம் சுப்பையா நாயுடுவின் இசையில் உருவான “சிங்கார வேலனே தேவா” என்ற பாடல் அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் திரையிசையின் ஒரு சாகாவரம் பெற்ற பாடலாக இருந்து வருகின்றது என்பதை யாரும் மறுக்க இயலாது. முதலில் இந்தப் பாடல், அன்றைய முன்னணிப் பாடகராக இருந்த பின்னணிப் பாடகி பி லீலாவைப் பாட வைப்பதாகத்தான் இருந்தது. நாதஸ்வரத்திற்கு இணையாகப் பாட வேண்டிய ஒரு சவாலான பாடல் என்பதால், அப்போது வளர்ந்து வரும் இளம் பின்னணிப் பாடகியாக இருந்த எஸ் ஜானகி இந்தப் பாடலைப் பாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுப் பாடலைப் பாடினார்.
புகழ் பெற்ற நாதஸ்வர இசைக் கலைஞர் காருக்குறிச்சி அருணாச்சலத்தின் நாதஸ்வர இசையை சென்னையில் உள்ள ஸ்டூடியோவிலும், பின்னணிப் பாடகி எஸ் ஜானகியின் குரல் பதிவை மும்பையில் உள்ள ஸ்டூடியோவிலும் தனித் தனியாகப் பதிவு செய்து, அன்றைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, இரண்டு பதிவுகளையும் மிகத் துல்லியமாக ஒன்றாக இணைத்து, ஒரே பாடலாக உருவாகியதுதான் காலத்தால் அழியாத இந்தக் காவியப் பாடலான “சிங்கார வேலனே தேவா” என்ற பாடல். ஜெமினி கணேசன், சாவித்திரி, ஆர் எஸ் மனோகர், குமாரி கமலா, எஸ் வி ராமதாஸ், குசலகுமாரி, கே சாரங்கபாணி, டி பி முத்துலட்சுமி என பலர் நடிப்பில், 1962ம் ஆண்டு பொங்கல் திருநாளன்று வெளிவந்த இந்த “கொஞ்சும் சலங்கை” திரைப்படம், வெறும் திரைப்படம் மட்டும் அல்ல. இசை, நடனம் ஆகிய கலைகளும், தொழில்நுட்பமும் இணைந்து படைத்த ஒரு கலைப் பொக்கிஷம் என்றால் அது மிகையன்று.