எனது ஹிந்தி உச்சரிப்பை கிண்டல் செய்வது முட்டாள்தனம் : ராஷ்மிகா மந்தனா
கன்னடத்தில் அறிமுகமாகி தெலுங்கு, தமிழ் சினிமாவில் வளர்ந்து தற்போது பாலிவுட்டிலும் முன்னணி இடத்தில் இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. அவர் நடித்த ஹிந்தித் திரைப்படங்களான 'அனிமல்', 'தம்மா', 'காக்டெய்ல் 2' ஆகியவற்றில் ராஷ்மிகாவின் ஹிந்தி உச்சரிப்பு சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்யப்பட்டது.
இந்த கிண்டல்கள் குறித்து தற்போது ராஷ்மிகா மந்தனா பேசியிருக்கிறார். கரண் ஜோகர் நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் இது குறித்து கூறியிருப்பதாவது :
என் பேச்சில் தென்னிந்திய உச்சரிப்பு இருப்பதாகக் கூறுவதில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஏனென்றால், நான் தென்னிந்தியாவைச் சேர்ந்தவள். எனவே, என் பேச்சில் அந்த உச்சரிப்பு இருப்பது இயல்பானதுதான். அதைத் தவறாகப் பார்ப்பது முட்டாள்தனம்.
எனது திரைப்பயணத்தின் தொடக்கத்திலிருந்தே நடிப்பு, மொழி, உச்சரிப்பு எனப் பல விஷயங்களுக்காக விமர்சனங்களையும் கிண்டல்களையும் சந்தித்து வருகிறேன். ஆனால், எதற்காகவும் என்னை ஒரு வட்டத்திற்குள் சுருக்கிக் கொள்ள விரும்பியதில்லை. ஒரே ஒரு மொழியில் மட்டும் பணியாற்றாமல், அனைத்து மொழிப்படங்களிலும் நடிக்க விரும்புகிறேன் என்கிறார் ராஷ்மிகா .