உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இன்று ஒரே படம்தான் ரிலீஸ், தள்ளிப்போன இரண்டு படங்கள்

இன்று ஒரே படம்தான் ரிலீஸ், தள்ளிப்போன இரண்டு படங்கள்

ஒரு பெரிய படம் வெளியாகும் போது சிறிய படங்களைத் திரையிட தியேட்டர்காரர்கள் மிகவும் தயங்குவார்கள். அப்படங்களின் தயாரிப்பாளர்களும், வினியோகஸ்தர்களும் நிறைய முயற்சி செய்தால்தான் ஒரு சில தியேட்டர்களில் ஓரிரு காட்சிகளாவது கிடைக்கும். அதுவும் அந்தப் பெரிய படம் பெரிய வரவேற்பைப் பெற்றுவிட்டால், அவ்வளவுதான், சொல்லவே வேண்டாம். வேறு எந்தப் படங்களுக்கும் தியேட்டர்களே கிடைக்காது.

அப்படியான ஒரு படமாக கடந்த வாரம் வெளியான 'ஜெயிலர் 2' படம் இருக்கிறது. 549 கோடி வசூலை ஒரு வாரத்தில் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அப்படம் அக்டோபர் 15ல் வெளியானது. இருப்பினும் அக்டோபர் 16ல் 'டிரோன்ஸ்' என்ற படத்தை வெளியிட்டார்கள். அப்படத்திற்கு சரியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை, அதனால் ரசிகர்களும் குறைவாகவே வருகிறார்கள் என படக்குழுவினர் பத்திரிகையாளர்கள் முன் அழுதே விட்டார்கள்.

இன்று அக்டோபர் 23ல் 'ஹைக்கூ, டெலிவரி பாய், விடியும் காத்திரு,' ஆகிய படங்கள் வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள். அவற்றில் 'ஹைக்கூ' படம் மட்டுமே இன்று வெளியாகி உள்ளது. மற்ற இரண்டு படங்களின் வெளியீட்டையும் தள்ளி வைத்துவிட்டார்கள். இப்படத்திற்கு மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ஓரிரு காட்சிகள்தான் கிடைத்துள்ளன. அவற்றிற்கான ஆன்லைன் முன்பதிவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

இருப்பினும் அக்டோபர் 30ம் தேதியன்று நான்கைந்து சிறிய படங்களை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். அதற்கும் அடுத்த வாரம் தீபாவளிப் படங்கள் வெளியாகப் போகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !