12 வருடத்திற்கு முன் ஒருவர் சொன்னது நடந்தது : ஏ.ஆர் ரஹ்மான் சொன்ன ஆச்சரிய தகவல்
பாலிவுட்டில் மிகப் பிரமாண்டமாக தயாராகியுள்ள ராமாயணம் திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகை ரிலீஸ் ஆக நவ., 5ல் வெளியாகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். அவருடன் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹேன்ஸ் ஜிம்மர் என்பவரும் இதில் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற போது அதில் பேசிய ஏ.ஆர் ரஹ்மான், ‛‛12 வருடங்களுக்கு முன்பே ராமாயணம் படத்தில் நீங்கள் இசையமைப்பீர்கள் என ஒரு நபர் தனக்கு கூறியதாக ஒரு ஆச்சரிய தகவலை கூறினார்.
2014 ஆம் ஆண்டு சதீஷ் என்கிற நபர் ஏ.ஆர் ரஹ்மானுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தாராம். அதில், “அதிகாலையில் என் கனவில் நீங்கள் தோன்றினீர்கள். அது உண்மையாக போகிறது என்றும் நம்புகிறேன். நீங்கள் இந்தியா முழுவதும் மற்றும் உலகெங்கிலும் ராமாயண காவியத்தை இசை நிகழ்ச்சிகளாக வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள்” என்று தான் கண்ட கனவை சதீஷ் எழுதியதாக ரஹ்மான் பகிர்ந்து கொண்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அது தற்போது உண்மையாகி உள்ளது என்றும் அவர் ஆச்சரியத்துடன் கூறினார்.