தமிழில் வெளியாகும் அடுத்த மலையாள சூப்பர் ஹீரோ படம்
மலையாளத்தில் தற்போது பேண்டஸி சூப்பர் ஹீரோ படங்கள் அதிக அளவில் தயாராகிறது. 'மின்னல் முரளி'க்குப் பிறகு சமீபத்தில் 'லோகா: சாப்டர் ஒன்' படம் வெளிவந்தது. இதன் இரண்டாவது பாகம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் மலையாளத் திரையுலகில் உருவாகி வரும் புதிய பேண்டஸி ஆக்ஷன் சூப்பர் ஹீரோ திரைப்படம் 'காஸ்மிக் சாம்சன்'.
அப்ஜித் ஜோசப் இயக்கத்தில் சந்தீப் பிரதீப் சூப்பர் ஹீரோவாக நடித்துள்ளார். பீட்சா டெலிவரி பாய்யாக இருக்கும் ஹீரோவுக்கு சூப்பர் சக்திகள் கிடைத்து அவர் என்னவெல்லாம் செய்கிறார் என்பது தான் படத்தின் கதை. ஹாலிவுட்டில் வெளியான 'ஸ்பைடர் மேன்' படத்தின் கதையும் இதுதான்.
மியா ஜார்ஜ், முகேஷ், அல்போன்ஸ் புத்திரன், ஹிப்ஸ்டர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியத் படமாக வெளியாகவுள்ளது. 'மின்னல் முரளி' படத்திற்குப் பிறகு ஹாலிவுட் அதிரடி இயக்குனர் 'வ்லாட் ரிம்பர்ங்' இப்படத்திற்கு ஆக்ஷன் இயக்குனராகப் பணியாற்றுகிறார். வரும் நவம்பர் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.