அதை 8வது டேக்குல வந்து சொல்றீங்க பாருங்க.. பக்ஸை கலாய்த்த ரஜினிகாந்த்
சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர் 2' திரைப்படம் வெளியாகி வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் நடித்த பலருமே ரசிகர்களிடம் அடையாளம் பெற்று பேசப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் பக்ஸ் என்கிற பகவதி பெருமாள் இந்த படத்தில் ரஜினிகாந்தை மிரட்டும் ஒரு லோக்கல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரும் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபலமாகியுள்ளார்.
இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் நடித்த அனுபவம் குறித்து அவர் கூறும்போது, “ஒரு காட்சியில் ரஜினி சார் என்னை கீழே தள்ள வேண்டும்.. நான் விழுந்ததும் என் நெஞ்சில் கால் வைத்து மிதிக்க வேண்டும். ஆனால் இந்த காட்சியில் நான் கீழே விழுவது செயற்கையாக இல்லாமல் இயல்பாக இருக்க வேண்டும் என இயக்குனர் நெல்சன் நினைத்ததால் கிட்டத்தட்ட ஆறு ஏழு டேக்குகள் எடுத்தும் திருப்தி வரவில்லை. அப்போது நான் பத்து வருடங்களுக்கு முன்பே பாண்டியன் மாஸ்டரிடம் சிலம்பம் கற்றுக் கொண்டேன்.. அப்போது அவர் சொல்லிக் கொடுத்த டெக்னிக்கை இங்கே பயன்படுத்தலாமா என்று நானாக இயக்குனர் நெல்சன் மற்றும் ரஜினி சார் ஆகியோர் இருக்கும்போது கூறினேன்.
ஆனால் அதை நெல்சன் கவனிக்கவில்லை. அடுத்த டேக் எடுத்தார்கள். அதுவும் திருப்தியாக அமையவில்லை. நேரம் ஆகிவிட்டதால் பேக்அப் சொல்லிவிட்டார்கள். அப்போது என் அருகில் வந்த ரஜினி சார் பாண்டியன் மாஸ்டரிடம் வித்தை கற்றவரா நீங்கள் என்று கேட்டுக்கொண்டு உடனே அருகில் இருந்த நெல்சனை அழைத்து இவர் பாண்டியன் மாஸ்டரிடம் பயிற்சி எடுத்தவராம். ஆனால் அதை எட்டாவது டேக் எடுக்கும்போது வந்து சொல்றார் பாருங்க.. என்று சொல்லி கிண்டல் அடித்தார்.
அதுமட்டுமல்ல ஒளிப்பதிவாளர் விஜய்யிடமும் சென்று இதேபோல கூறி என்னை கலாய்த்தார்.. அதாவது படையப்பா படத்தில் மாப்ள அவர்தான்.. ஆனா சட்டை என்னுடையது என்று ரஜினி ஒவ்வொருவரிடமும் சொல்வாரே.. அந்த காட்சி தான் எனக்கு அப்போது நினைவுக்கு வந்தது. ஆனாலும் ரஜினி சார் என்னை அப்படி கிண்டல் செய்வதை ஆனந்தமாக ரசித்தேன்” என்று கூறியுள்ளார்.