ஜெயிலர் 2 ; யுஏ சான்றிதழ், 2 மணி நேரம் 45 நிமிடம் ரன்னிங் டைம் : ரஜினி ஹேப்பி
நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர் 2' படம் அக்டோபர் 15ம் தேதி வெளியாகிறது.
இப்படத்திற்கு யுஏ 16 + சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படம் 2 மணி நேரம் 45 நிமிடம் கால அளவில் உள்ளது. 'யுஏ 16 +' சான்றிதழ் என்பது, பொதுமக்கள் அனைவரும் காண அனுமதி உண்டு; இருப்பினும், 16 வயதுக்குட்பட்ட பார்வையாளர்களுக்குப் பெற்றோரின் வழிகாட்டுதல் அல்லது மேற்பார்வை பரிந்துரைக்கப்படுகிறது.
ரஜினிகாந்த் நடித்து கடைசியாக வெளிவந்த 'கூலி' திரைப்படம் 'ஏ' சான்றிதழ் பெற்றது. ரஜினிகாந்த் நடித்த ஒரு படம் பல வருட இடைவெளிக்குப் பிறகு 'ஏ' சான்று பெற்றது. அதனால், தங்களது குழந்தைகளுடன் பெற்றோர் தியேட்டர்களுக்கு வந்து படம் பார்க்க முடியவில்லை. அது படத்தின் வசூலை வெகுவாக பாதித்தது.
'ஜெயிலர் 2' படத்திற்கு அப்படி எதுவும் நடந்துவிடக் கூடாது என ரஜினிகாந்த் அவரது ஆலோசனையை சொன்னதாகவும் தகவல் வெளியானது. எனவே, படக்குழுவினர் படத்தில் இடம் பெற்றிருந்த சில ரத்தம் தெறிக்கும் காட்சிகளை நீக்கியுள்ளதாகவும் கூடச் சொல்கிறார்கள். தற்போது படத்திற்கு 'யுஏ 16 +' சான்றிதழ் கிடைத்துள்ளதால் ரஜினிகாந்த் தரப்பும் மகிழ்ச்சி அடைந்திருக்கும்.
'கூலி' படம் போல அல்லாமல், 'ஜெயிலர் 2' படத்தை குடும்பத்தினருடன் மக்கள் பார்க்க இந்த சான்றிதழ் ஏதுவாக அமைந்துள்ளது.