என்னை செதுக்கியவர்களில் ஒருவர்: சிங்கீதம் சீனிவாசராவ் குறித்து கமல்ஹாசன்
பிரபல இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ், வயது மூப்பால் வரும் உடல்நலப் பிரச்னையால் சென்னையில் நேற்று (அக்., 3) இரவு காலமானார். அவருக்கு வயது 95. சென்னை, சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு திரைப்பிலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச்சடங்கு இன்று, (அக்.,4) மாலை நடக்கிறது.
நடிகர் கமல்ஹாசன் நடித்த 100வது படமான ராஜபார்வை மற்றும் 'அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காம ராஜன், காதலா காதலா, பேசும்படம், மும்பை எக்ஸ்பிரஸ்' படங்களை இயக்கியவர் சிங்கீதம் சீனிவாசராவ், மேலும் தெலுங்கில் 'சொம்மொகடிதி சோகொகடிதி' (1979) என்ற படத்தையும் இயக்கினார். இவர்கள் கூட்டணியில் வெளியான முதல் படம் இது. இதில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். தமிழில் 'இரு நிலவுகள்' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. கமல்ஹாசன் தயாரித்த மகளிர் மட்டும் படத்தையும் சிங்கீதமே இயக்கினார்.
இந்நிலையில் சென்னையில் வைக்கப்பட்டுள்ள சீங்கீதம் சீனிவாசராவ் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு கமல்ஹாசன் அளித்த பேட்டி: நீண்ட கதை பெரிய நட்பு, நட்பு என்று சொல்வதற்கு வயது எனக்கு பொருந்தது. ஆனாலும் அதுதான் எங்களுக்கு இருக்கின்ற உறவு. இளமையில் மரணம் கொடியது, ஆனால் அவர் இப்படிதான் இறக்கப்போகிறேன் என சிறு வயதிலேயே என்று முடிவு செய்துவிட்டார். சிங்கீதம் இளமையில் மாண்டுவிட்டார் என்றுதான் சொல்வேன். அவர் உடலுக்குதான் வயது அதிகம். மனசு இளமையானது.
எல்லோருக்கும் மிகச்சிறந்த உதாரணம் அவர். அவர் இயக்கிய எல்லா திரைப்படங்களும் முக்கியமான திரைப்படங்கள். என் வாழ்க்கையில் என்னை செதுக்கிய பலரில் இவரும் ஒருவர். மனதில் பட்டதை சொல்லக்கூடியவர். அதுதான் இளமையின் பொருள், அவர் இளமையின் ரகசியமும் கூட.'' என்றார்.
பின்னர், சோஷியல் மீடியாவில் ''சிங்கீதம்காரு தன் சித்தப்படி, இளமையில் இளமையுடன் உயிர் நீத்தார். அவர் இளமை பலருக்கும் தொற்றாது. அந்த குணம் தொற்ற வேண்டும் என்ற ஆசையில் அவர் கை பற்றி நடந்த நண்பர்களுள், சீடர்களுள் நானும் உள்ளேன்'' என்றும் பதிவிட்டுள்ளார்.
நடிகைகள் கவுதமி, ஸ்ருதிஹாசன், இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் ஆகியோரும் சிங்கீதம் சீனிவாசராவ் மறைவுக்கு இரங்கல்
செலுத்தி உள்ளனர்.