உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மண் ராசி கை கொடுக்கும்: 'சேதுபூமி' நடிகை தீபாவின் தில்

மண் ராசி கை கொடுக்கும்: 'சேதுபூமி' நடிகை தீபாவின் தில்


'மண் ராசியும், கை ராசியும் ஒன்று சேர்ந்தால் உலகில் எந்த சூழலிலும் ஜெயித்துக்காட்டலாம்' என்கிறார் சினிமாதுறைக்கு பல ஜாம்பவான்களை தந்த சேது பூமியான ராமநாதபுரம் தீபா ஆண்டனி.

சீரியல், குறும்படங்கள், சில சினிமாக்களில் என கிடைத்த 'கேப்'பில் நடிப்பு திறனை வெளிப்படுத்தி தனக்கான இடத்தை தேடும் இளம் நாயகியான இவர், தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக நம்மிடம்...

சினிமா மீதான ஆர்வம் கொண்டவர் அப்பா ஆண்டனி. இதனால் எனக்கும் அந்த ஆர்வம் சிறு வயதிலேயே ஒட்டிக்கொண்டது. படித்தது பி.டெக்., என்றாலும் என் கனவு சினிமாவை நோக்கியே இருந்தது. இந்த ராமநாதபுரம் மண் சினிமாத்துறைக்கு கமல், விக்ரம் போன்ற பெரிய ஹீரோக்கள், காமெடியில் உச்சம் தொட்ட செந்தில், குணசித்திர நடிப்பில் கலக்கும் ராஜ்கிரண், வேல ராமமூர்த்தி போன்ற பல திறமையானவர்களை தந்துள்ளது.

திறமை, நேரம் சரியாக அமைந்தால் இந்த ராமநாதபுரம் நடிகர்கள் வரிசையில் நானும் கூட எதிர்காலத்தில் இடம் பிடிக்க முடியும். காலம் யாரை எங்கே வைக்கும், யாரை எந்த உயரத்திற்கு கொண்டு செல்லும் என்பது யாருக்கும் தெரியாது.

சினிமா பி.ஆர்.ஓ., மதுரை வினோத் போன்றோர் உதவியுடன் என் சினிமா பயணம் தொடர்கிறது.

இதுவரை 'தெரிஞ்சா காதலி' என்ற படம் மூலம் ஹீரோயின் தோழியாக என் சினிமா பயணம் துவங்கியது. தற்போது பெயரிடாத சில சிறிய பட்ஜெட் படங்களில் ஒப்பந்தம் ஆகி நடித்து வருகிறேன். தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ள படத்திற்கு ஆடிஷனில் தேர்வாகியுள்ளேன். இதுவரை 10க்கும் மேற்பட்ட குறும்படங்களில் எனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளேன். இன்ஸ்டாவில் தொடர்ந்து 'ஆக்டிவ்' ஆக பல 'ரீல்ஸ்'களை வெளியிட்டு வருகிறேன். வியூவர்ஸிடம் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கிறது.

சில வளரும் நடிகைகள் 'இன்ஸ்டா' மூலம் எனக்கு சினிமா சான்ஸ் கிடைத்தது என இதே தினமலர் சண்டே ஸ்பெஷலில் தெரிவித்துள்ளனர். நான் படித்துள்ளேன். அதுபோல் எனக்கும் தினமலர் மூலம் சினிமாவில் ஒரு 'டர்னிங் பாயின்ட்' ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்காக டான்ஸ், சிலம்பம், கராத்தே உள்ளிட்ட கலைகளை நன்று கற்றுத் தேர்ந்துள்ளேன்.

குடும்பப் பாங்கான நடிப்பு கிடைத்தால் என்னை யார் என நிரூபித்து விடுவேன். சமீபத்தில் வரவான இளம் நடிகைகளில் கேரளத்தின் மமிதா பைஜூ எதார்த்தமாக நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அவரது தீவிர ரசிகை நான். ரிபெல், ஜூட், விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் போன்ற படங்களின் அவர் வெளிப்படுத்திய நடிப்பு அருமை. நடிப்பில் அவர் என் 'ரோல் மாடல்'. இது என் சினிமா வாழ்க்கையிலும் கை கொடுக்கும். ராசியான மண்ணில் பிறந்த நானும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கான காலம், நேரம் கட்டாயம் அமையும் என தொடர்ந்து முயற்சி செய்கிறேன் என்றார் இந்த தீபா ஆண்டனி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !