உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹிந்தியில் 'திரிஷ்யம் 3' பார்க்கும்படி மோகன்லாலிடம் கோரிக்கை வைத்த அஜய் தேவ்கன்

ஹிந்தியில் 'திரிஷ்யம் 3' பார்க்கும்படி மோகன்லாலிடம் கோரிக்கை வைத்த அஜய் தேவ்கன்


மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 13 வருடங்களில் அடுத்தடுத்து வெளியான 'திரிஷ்யம்' படத்தின் மூன்று பாகங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. அதேபோல, ஹிந்தியிலும் இந்தப் படத்தை ரீமேக் செய்து நடித்த நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில், அங்கே இரண்டு பாகங்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், இன்று அதன் மூன்றாம் பாகம் வெளியாகி உள்ளது.

அதே சமயம், மற்ற இரண்டு பாகங்களைப் போல அல்லாமல், மூன்றாம் பாகத்தில் ஹிந்திக்காகவே கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, தாங்களாகவே ஒரு புதிய திரைக்கதையை உருவாக்கியுள்ளனர். அதனால், மலையாளத்திலிருந்து நிச்சயம் இந்தப் படம் மாறுபட்டு இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ள நடிகர் அஜய் தேவ்கன், இந்தப் படத்தை மோகன்லால் பார்க்க வேண்டும் எனக் கூறி அவருக்குத் தானே தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் பேசி கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.

காரணம், மூலக்கதைக்கு சொந்தக்காரர்களான மோகன்லால் படத்தைப் பார்த்துவிட்டு தனது ஒப்புதலை வழங்க வேண்டும் என தான் விரும்பியதாகவும் கூறினார் அஜய் தேவ்கன். தற்போது மோகன்லால் விடுமுறையில் இருப்பதால், இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தனது கருத்துக்களை விரைவில் தெரிவிப்பார் என தான் நம்புவதாகவும் கூறியுள்ளார் அஜய் தேவ்கன். அது மட்டுமல்ல, மலையாளத்தில் ஜீத்து ஜோசப் நான்காம் பாகம் வர வாய்ப்பு இருக்கு என்று சொன்னது போல் அல்லாமல், ஹிந்தியில் இந்த மூன்றாம் பாகத்துடன் இந்த 'திரிஷ்யம்' சீசன் நிறைவுக்கு வருகிறது என்கிற தகவலையும் அஜய் தேவ்கன் பகிர்ந்து கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !