உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 10 மாடி கட்டடம், 30 கோடி செலவு : இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி மூலம் நிதி திரட்ட ஏற்பாடு

10 மாடி கட்டடம், 30 கோடி செலவு : இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி மூலம் நிதி திரட்ட ஏற்பாடு

சென்னை வடபழனி கமலா தியேட்டர் அருகே சினிமா இசைக் கலைஞர்கள் சங்கம் பல ஆண்டுகளாக செயல்படுகிறது. இசையமைப்பாளர்கள், இசைக்கலைஞர்கள், பாடகர்கள் இதில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த கட்டடம் பழசாகிவிட்டது. இதை இடித்துவிட்டு நடிகர் சங்கம் பாணியில் புது கட்டடம் கட்ட பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடந்தது.

இந்நிலையில், ஒரு தனியார் நிறுவனம் உதவியுடன் அந்த இடத்தில் 10 மாடியில் புது கட்டடத்தை இசைக்கலைஞர்கள் சங்கமும், அதன் அறக்கட்டளையும் இணைந்து கட்ட உள்ளன. 30 கோடி மதிப்பில் 10 மாடி கட்டிடமாக அந்த திட்டமும் உருவாகி உள்ளது. இதற்கான நிதி ஆதாரத்தை திரட்ட சென்னை ஐதராபாத், குஜராத், சிங்கப்பூர், துபாய் ஆகிய இடங்களில் இசைக்கச்சேரிகள் நடந்த சங்க முடிவு செய்துள்ளது.

தங்கள் சொந்த கட்டடம் என்பதால் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்கள் சங்க நிதிக்கு கச்சேரி நடத்த ஓகே சொல்லி இருக்கிறார்களாம். மற்ற முன்னணி இசையமைப்பாளர்களும் தங்களால் ஆன உதவியை செய்ய முன் வந்து இருக்கிறார்களாம். முன்னணி பாடகர்களும் அந்த நிகழ்ச்சிகளில் பாட உள்ளனர். 3 ஆண்டுகளில் இந்த கட்டட பணிகளை முடிக்க பிளான்.

இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னை தி நகரில் நடிகர் சங்க புது கட்டடம் திறக்கப்பட உள்ளது. சென்னை அண்ணாசாலையில் உள்ள பிலிம் சேம்பர் வளாகமும் தியேட்டர் உள்ளிட்ட வசதிகளுடன் விரைவில் திறக்கப்பட உள்ளது.

இதை தொடர்ந்து இசைக்கலைஞர்கள் சங்கமும் புது கட்டட பணிகளை தொடங்கி உள்ளது. ஆனால், தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு இன்னமும் சொந்தமான கட்டடம் இல்லை. அவர்கள் பிலிம் சேம்பர் வளாகத்தில் இருக்கிறார்கள். அவர்களும் விரைவில் சொந்த கட்டடம் கட்டி செல்ல முயற்சி செய்து வருகிறார்கள். அதற்காக அவர்களும் அடுத்த ஆண்டு இளையராஜா, அனிருத் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளனர். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் சங்க உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் செய்ய உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !