உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: கன்னடர்கள் எதிர்த்த எம்ஜிஆர் படம்

பிளாஷ்பேக்: கன்னடர்கள் எதிர்த்த எம்ஜிஆர் படம்

எம்ஜிஆர் நடித்த பல படங்கள் கன்னடத்தில் வெளியாகி அங்கும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக தமிழர்கள் அதிகமாக வாழும் பெங்களூரு, மாண்டியா பகுதிகளில் 100 நாட்களை தாண்டிய படங்களும் உண்டு. கன்னடர்களும் எம்ஜிஆர் படங்களை விரும்பி பார்த்தார்கள். ஆனாலும் எம்ஜிஆர் நடித்த 'காஞ்சித் தலைவன்' படத்திற்கு கன்னடர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு. படத்தை எதிர்த்து போராட்டமும் நடத்தினார்கள்.

படத்தின் கதைப்படி எம்ஜிஆர் பல்லவ மன்னன் நரசிம்மவர்மானாகவும், எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவரது படைத்தளபதியாகவும், பானுமதி மகாராணியாகவும் நடித்தனர். பல்லவ நாட்டின் செல்வ செழிப்பையும், கலை செழிப்பையும் அறிந்த சாளுக்கிய மன்னன் (தற்போதைய கர்நாடகா) அசோகன் படையெடுத்து வருவதும். இந்த போரில் பல்லவ மன்னனான எம்ஜிஆர் ஜெயிப்பது மாதிரியான கதை. பல்லவ மன்னனுக்கும், சாளுக்கிய மன்னனுக்கும் நடந்த போரை அடிப்படையாக கொண்ட புனைவு கதை. இந்த கதையில் சாளுக்கிய மன்னனின் கொடியை பல்லவ வீரர்கள் அவமதிப்பது போன்று காட்சிகள் இருந்தன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான் கர்நாடகாவில் போராட்டங்கள் நடந்தன. இதற்கு பிறகு கர்நாடக மாநிலத்திற்கென்று பொது கொடி ஒன்று உருவாக்கப்பட்டது. போராட்டங்களால் இந்த காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டது. அதோடு 'காஞ்சித் தலைவன்' என்பது அன்றைக்கு அரிசியலில் பெரிய ஆளுமையாக இருந்த சி.என்.அண்ணாத்துரையை குறிப்பதால் தலைப்பையும் மாற்றச் சொன்னது தணிக்கை குழு. அதற்கு படக்குழு மறுத்து விட்டது. தணிக்கை, பிரச்சினை, கர்நாடக போராட்டம் போன்றவற்றால் தாமதமாக வெளியான இந்த படம் போதிய வரவேற்பை பெறவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !