உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குழந்தைகள் காட்சிக்கு கடுமையான கட்டுப்பாடு : தணிக்கை வாரியத்தின் புதிய விதிமுறைகள் அறிவிப்பு

குழந்தைகள் காட்சிக்கு கடுமையான கட்டுப்பாடு : தணிக்கை வாரியத்தின் புதிய விதிமுறைகள் அறிவிப்பு

பல ஆண்டுகளுக்கு பிறகு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சமீபத்தில் மறு சீரமைப்பு செய்யப்பட்டது. பிரீத்தி ஜிந்தா, சுனில் ஷெட்டி, பங்கஜ் திரிபாதி, பிரியதர்ஷன் உள்பட 18 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து திரைப்படத் தணிக்கைச் சான்றிதழுக்கான திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தணிக்கை வாரியத் தலைவர் சாஷி சேகர் வேம்படி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

போதைப்பொருட்கள் பயன்பாடு அல்லது கடத்தல் காட்சிகள் இடம் பெற்றால், கட்டாயமாக எச்சரிக்கை வாசகம் இடம்பெற வேண்டும். அதாவது, 'சட்டவிரோத போதைப்பொருட்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் மற்றும் சிறைத்தண்டனையைப் பெற்றுத் தரும். போதைப்பொருளுக்கு நோ சொல்லுங்கள்' என்ற வாசகங்கள் இடம்பெற வேண்டும்.

மது, போதைப்பொருள் அல்லது புகையிலை பழக்கத்தை நியாயப்படுத்தவோ, மகிமைப்படுத்தவோ கூடாது.

இனம், மதம் அல்லது பிற குழுக்களை இழிவுபடுத்தும் காட்சிகள் அல்லது வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது.

அறிவியலுக்கு எதிரான அல்லது தேசவிரோத மனப்பான்மைகளை ஊக்குவிக்கும் உள்ளடக்கங்கள் தடை செய்யப்படுகின்றன.

வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களாகவோ, வன்முறையை அரங்கேற்றுபவர்களாகவோ அல்லது வன்முறைக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட சாட்சிகளாகவோ குழந்தைகளைச் சித்தரிப்பதையும், குழந்தைகள் எந்த விதமான துன்புறுத்தலுக்கும் உள்ளாக்கப்படுவதைக் காட்டுவதையும் தவிர்க்க வேண்டும்.

உடல் அல்லது மனநலக் குறைபாடு உள்ளவர்களைத் துன்புறுத்துவது மற்றும் கேலி செய்வதற்கு எதிராகவும் இந்த வழிகாட்டுதல்கள் எச்சரிக்கின்றன.

இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலோ அல்லது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையிலோ காட்சிகள் இருக்கக் கூடாது.

திரைப்படத் தலைப்புகள் ஆத்திரமூட்டும் வகையிலோ, ஆபாசமாகவோ, புண்படுத்தும் வகையிலோ அல்லது வழிகாட்டுதல்களை மீறும் வகையிலோ இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !