ஷங்கர் செய்யவிருந்த சர்வதேச முயற்சி : தமன் வெளியிட்ட தகவல்
ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படத்திற்கு இசையமைத்தவர் தமன். இவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ஷங்கரின் படங்களில் சர்வதேச பாப் நட்சத்திரங்களான மைக்கேல் ஜாக்சன் மற்றும் பிரிட்னி ஸ்பியர்ஸ் ஆகியோரை இணைக்க இருந்த இரண்டு லட்சிய திட்டங்களைப் பற்றி வெளிப்படுத்தியுள்ளார்.
ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்திற்காக பாப் உலகின் ராஜா மைக்கேல் ஜாக்சனுடன் இணைந்து பணியாற்ற ஏ.ஆர்.ரஹ்மான் திட்டமிட்டிருந்ததாக தமன் பகிர்ந்து கொண்டார். இந்த திட்டம் மே 2009-ல் விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது, ஆனால் ஜூன் 2009-ல் மைக்கேல் ஜாக்சனின் எதிர்பாராத மரணத்தைத் தொடர்ந்து அது கைவிடப்பட்டது.
அதையடுத்து, ராம் சரண், கியாரா அத்வானி நடித்த கேம் சேஞ்சர் படத்தில், தோப் என்ற பாடலின் ஆங்கிலப் பதிப்பை சர்வதேச அளவில் வெளியிடவும், அந்தப் பாடலின் முகமாக பிரிட்னி ஸ்பியர்ஸை கொண்டு வரவும் படக்குழு திட்டமிட்டிருந்தது. இருப்பினும், படத்தின் தயாரிப்பில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் காலநேர சிக்கல்கள் காரணமாக இந்த திட்டம் கைவிடப்பட்டது என்று தெரிவித்துள்ளார் தமன்.
இயக்குனர் ஷங்கர் தனது சமீபத்திய வெளியீடுகளுக்காக விமர்சனங்களை எதிர்கொண்டாலும், வெற்றியும் தோல்வியும் திரைப்படத்துறையில் தவிர்க்க முடியாத பகுதியாகும். இந்த சர்வதேசக் கூட்டணிகள் சாத்தியமாகாமல் போயிருக்கலாம். ஆனால் அவற்றிற்குப் பின்னால் இருந்த லட்சியத்தை மறுக்க முடியாது.