உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆங்கிலத்தில் பேசினால் திமிர் என்று அர்த்தமா ? பிரித்விராஜ் மனைவி காட்டம்

ஆங்கிலத்தில் பேசினால் திமிர் என்று அர்த்தமா ? பிரித்விராஜ் மனைவி காட்டம்


சமீபத்தில் ஊர்வசி, ஐஸ்வர்ய லட்சுமி நடிப்பில் 'ஆஷா' திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி ஊர்வசியை ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தினார். அதற்கு உடனே ஊர்வசி அழகான மலையாளத்தில் பாசத்தோடு பேசினால் எல்லோருக்கும் எளிதாக புரியுமே என்று அவரை கிண்டல் அடித்தார். இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் ஒரு பெரிய விவாதத்தை கிளப்பி உள்ளது அதற்கு காரணம் நடிகர் பிரித்விராஜின் மனைவி சுப்ரியா மேனன் தான்.

அவர் இந்த ஆங்கில மொழி பயன்பாடு குறித்து கூறும்போது, “நாம் நமது குழந்தைகளை இங்கிலீஷ் மீடியம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படிக்க வைக்கிறோம். வெளிநாடுகளுக்கு எளிதில் குடியேறி மிகப்பெரிய அளவில் புலம்பெயர் சமூகமாக வாழ்கிறோம். அப்படி இருக்கையில் ஒருவர் ஆங்கிலத்தில் பேசினால் மட்டும் அதை ஏன் திமிர் அல்லது அகந்தையின் அடையாளமாக கருத வேண்டும் ? மற்றொரு மொழியில் பேசும்போது மலையாள மொழி மீதான நமது பற்று எப்படி குறையும் ? இது எனக்கு உண்மையிலேயே வியப்பு அளிக்கிறது” என்று தனது சோசியல் மீடியா பக்கத்தில் கூறியிருந்தார்.

இவர் கூறியதை நடிகை ஊர்வசி கூறும் கருத்துக்கு பதிலடியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்று சிலர் கொளுத்திப்போட அது தனியாக ஒரு புதிய விவாதமாக மாற தொடங்கியது. ஆனாலும் நான் பேசியதை சூழலுக்கு சம்பந்தமில்லாமல் தவறாக திரித்துக் கூறியுள்ளனர் என்று விளக்கமளித்துள்ளார் சுப்ரியா மேனன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !