இனி, அனிருத் வாழ்க்கை மாறப்போகுது: கமல்ஹாசன் சொன்னது ஏன்?
சென்னையில் நடந்த கர்நாடக சங்கீத பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு படத் தொடக்க விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசியது: ''இந்த விழாவுக்கு எந்த மறுப்பும், தயக்கமும் இல்லாமல் வர ஒப்புக்கொண்டேன். எனக்கு சின்ன வயதில் படிப்பு வரவில்லை. அப்போது இசை கற்றுக்கொண்டேன், அடுத்து டான்ஸ் கற்றுக்கொண்டேன். அடுத்து சினிமாவில் உதவி இயக்குனராக கிளாப் அடித்தேன். இப்போது இந்த படத்துக்காக கிளாப் அடித்து இருக்கிறேன்.
எல்லிஸ் டங்கனை (எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த மீரா படத்தின் இயக்குனர்) நான் சந்தித்து இருக்கிறேன். அவர் இங்கே டாக்குமெண்டரி எடுப்பதற்காக வந்தார்; 88 வயசுதான். அதில் உதவி இயக்குனராக வேலை செய்ய ஆசைப்பட்டேன். அது நடக்கவில்லை. அவரிடம் கையெழுத்து மட்டும் வாங்கினேன், தமிழகத்தில் எல்லா வீடுகளில் சுப்ரபாதம், ரங்கபுர விஹாரா, லலிதா சஹஸ்ரநாமம் கேட்காமல் இருக்குமா? அதை எம். எஸ். அம்மா தனது குரலில் அழகாக்கினார். அவரை பற்றி பாலமுரளி கிருஷ்ணா சொல்ல கேட்டு இருக்கிறேன். நான் 'ஹே ராம்' எடுக்கும் பொழுது, அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. 'வைஷ்ணவ ஜனதோ' பாடலை அவர்களை வைத்து பாட நினைத்தேன். அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போக, வீல் சேரில் அழைத்து வந்து பட்டம்மாளை பாட வைத்தேன். எம்.எஸ்.சுப்புலட்சுமி, பட்டம்மா, எம்.எல்.வசந்தகுமாரி என 3பேரும் என் தலையில் தொட்டு ஆசீர்வாதம் செய்து இருக்கிறார்கள்.
எப்படி பாலசந்தர் சாருக்குத் திடீர்னு 'அரங்கேற்றம்'ல இருந்து வாழ்க்கையில ஒரு திருப்பம் வந்ததோ, எப்படி கே. விஸ்வநாத் அவர்களுக்கு 'சங்கராபரணம்' போது அப்படியே அவரோட வாழ்க்கையே மாறிச்சோ, அந்த மாதிரி அனிருத்துடைய மியூசிக், அவர் பயணம் இந்த படத்தில் இருந்து மாறும். நான் கனவு கண்ட சவுத் இந்தியா இப்படித்தான் இருக்கணும். அப்படித்தான் இருந்தது. சென்னை சினிமா தாயகமாக இருந்தது. இனி அவரவர் மொழியில் தென்னிந்தியாவில் படங்கள் ஓடணும். உங்களுக்கு கிடைச்ச இந்த வாய்ப்பை, உயிரையெல்லாம் கொடுத்துப் பண்ண வேண்டாம், உழைப்பைக் கொடுத்துச் செய்யுங்க.
தவறா வரவே வராது; ஏன்னா, ஸ்கிரீன் பிளே எழுதிட்டுப் போயிட்டாங்க அந்தம்மா. அதுல இன்னும் மெருகேத்தினா போதும். இங்க அவங்கள கும்பிடுறதுக்கு நிறையா பேர் இருக்காங்க. அவங்க வீணை வாசிப்பாங்க, டான்ஸ் ஆடுவாங்க, மீரா பாட்டெல்லாம் இன்னைக்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதை சிறப்பாக செய்யணும். அவ்வை சண்முகி மாதிரி வேஷம் எல்லாம் போடலாம், எம்.எஸ். அம்மா வேஷம் கஷ்டம். எனக்குத் தொட நடுங்கும். திருப்பதியில போனா அவங்க இருப்பாங்க, யு.என்-ல போனா போட்டோ இருக்கும். மியூசிக் அகாடமில மட்டுமா? எங்க போனாலும் அவங்க இருப்பாங்க'' என்றார்.