'சர்தார்-2' தோல்விக்கு பின் தெலுங்கு படத்தில் கவனம் செலுத்தும் கார்த்தி!
கார்த்தியின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய பின்னடைவாக 'சர்தார்-2' படம் அமைந்துள்ளது. வெற்றிப் படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்தபோதிலும், இப்படம் மிகக் குறைந்த அளவிலேயே வசூலைத் தொடங்கியதுடன், இரண்டாம் நாளிலிருந்தே வசூல் கடுமையாகச் சரிந்தது. கடந்த 10ம் தேதி வெளியான இப்படம் 8 நாட்களில் 15 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இந்த தோல்வி கார்த்தி மற்றும் அவரது படக்குழுவினருக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
சர்தார் -2 உடன் இணைந்து வெளியான சூரியின் 'மண்டாடி' படம் உலகளவில் சுமார் 100 கோடி வசூலை எட்டி சாதனை படைத்துள்ளது. இதனால் கார்த்தி தற்போது பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். நடிகர் மற்றும் தயாரிப்பாளர் நானியுடன் இணைந்து 'ஹிட்-4' படத்தில் நடிக்க அவர் ஏற்கனவே ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் அப்படம் இன்னும் முறைப்படி தொடங்கப்பட வில்லை.
இதற்கிடையில், 'மேட்' படத்தின் இயக்குனர் கல்யாண் சங்கர் இயக்கத்தில் உருவாகும் தெலுங்கு படத்தில் கார்த்தி கவனம் செலுத்தி வருகிறார். நாக வம்சி தயாரிக்கும் இந்த நகைச்சுவை திரில்லர் திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்ததும் கார்த்தி திரைக்கதையில் சில மாற்றங்களைக் கேட்டதாகவும், இதனால் படம் கைவிடப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால், அந்த செய்திகள் உண்மையல்ல என்பது தற்போது தெரியவந்துள்ளது.
கார்த்தி மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று, படத்தின் பெரும்பகுதி காட்சிகளை நிறைவு செய்துள்ளார். சர்தார்- 2 அனுபவத்திற்குப் பிறகு, வலிமையான கதைக்களமும் மக்களிடம் எளிதில் சென்று சேரும் வகையிலான படங்களையுமே கார்த்தி தேர்வு செய்து வருகிறார். அந்த வகையில், இந்த தெலுங்கு நகைச்சுவை திரைப்படம் அவரது அடுத்தடுத்த முக்கிய வெளியீடுகளில் ஒன்றாக மாறியுள்ளது.