உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கார்த்தியும் சூர்யாவும் ஏன் முதல் வரிசைக்கு முன்னேற முடியவில்லை?

கார்த்தியும் சூர்யாவும் ஏன் முதல் வரிசைக்கு முன்னேற முடியவில்லை?


எப்போதுமே பரபரப்புச் செய்திகளுக்காக ஏங்கி இருக்கும் திரைத்துறை மீடியாக்களுக்கு லேட்டஸ்ட் தீனி கார்த்தியின் 'சர்தார் 2' படத்தோல்வி. அதிலும் 25 வருட அனுபவங்களோடு, முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவின் டாப் டென் ஹீரோக்களில் ஒருவராக இருந்த கார்த்தியை மூன்றே படங்களில் முட்டித்தூக்கியிருக்கிறார் காமெடி நடிகர் சூரி.

'மண்டாடி'யில் பாய்மரக் கப்பல் போட்டியில் வென்ற சூரி, அதையும் விட சவாலான பாக்ஸ் ஆபிஸ் போட்டியிலும் கார்த்தியை சர்வ சாதாரணமாக ஓவர்டேக் செய்திருப்பதுதான் கடந்த வாரத்தை மொத்தமாக ஆக்கிரமித்த பிரேக்கிங் நியூஸ். சூர்யா அன் பிரதர்ஸூக்கு ஹார்ட் பிரேக்கிங்.

சுமார் 90 கோடி பட்ஜெட்டில் தயாரான கார்த்தியின் 'சர்தார் 2'வும் சுமார் 35 கோடியில் தயாரான சூரியின் மண்டாடியும் கடந்த வியாழனன்று களத்தில் மோதின. சர்தாரை, அனுபவம் வாய்ந்த பி.எஸ். மித்ரன் இயக்க, மண்டாடியை இயக்குனர் மதிமாறன் புகழேந்தி இயக்கியிருந்தார். இரு படங்களுக்குமே துவக்க தினத்தில், சரிசமமான திரையரங்குகள் கிடைத்திருந்தன.

ஆனால் பட ரிலீஸூக்குப் பின்னர் சர்தாரை வொர்ஸ்ட் எனவும் 'மண்டாடி' அபவ் ஆவரேஜ் எனவும் ரிசல்ட்கள் வரவே ஜனங்கள் மண்டாடியை இன்னும் கொஞ்சம் கூடுதலாகக் கொண்டாடத் துவங்கினார்கள். எனவே ரிலீஸூக்கு மறுநாளான வெள்ளியன்றே பெரும் சரிவைச் சந்தித்த சர்தார், சூரியின் மண்டாடிக்கு முன்னர் மண்டியிட்டது. தற்போதைய ஒருவார பாக்ஸ் ஆபீஸ் நிலவரப்படி மண்டாடி சுமார் 65 கோடியும், சர்தார் 15 கோடிக்கும் கீழ்தான் வசூல் செய்துள்ளன.

சர்தாரின் இந்த வீழ்ச்சி ரெகுலர் ஹீரோக்கள் அனைவரையும் அசைத்துப் பார்த்துள்ளது என்பதுதான் நிஜம். சூரி போன்ற ஒரு காமெடி நடிகர் நல்ல கதையுடன் கூடிய படத்துடன் வந்தால் அவர் எவ்வளவு பெரிய ஸ்டாரின் படத்தையும் பந்தாடிவிட முடியும் என்பதற்கு இதைவிட என்ன உதாரணம் வேண்டும்?

பொதுவாகவே ஹீரோக்கள் தங்களுக்கு என மார்க்கெட் வந்தபின்னர் ஆடுகிற ஆட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. கோடிகளுக்கு சம்பளத்தை உயர்த்துவது மட்டுமின்றி, தயாரிப்பாளர் செலவில் பத்துக்கும் மேற்பட்ட பவுன்சர்களை வைத்துக்கொண்டு தங்களை யாரும் நெருங்கவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள். முதல்பட வாய்ப்பு தேடும் இயக்குநர்களெல்லாம் இவர்களை சந்திப்பதற்குள் அவர்களுக்கு 'சர்தார் 2' அப்பா கேரக்டர் வயதாகிவிடும்.

இன்னும் குறிப்பாக சொல்வதென்றால், கதைகளை தேர்வு செய்வதில் அவர்கள் காட்டுகிற மெத்தனம்தான் அவர்களை பாதாளத்தில் கொண்டுபோய் தள்ளுகிறது. உதாரணத்துக்கு இப்போது இந்த கார்த்தியைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். கார்த்திக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மேனேஜர்கள் இருக்கிறார்கள். இவர்களைத் தாண்டி ஒருவேளை அவரை ரீச் செய்து கதை சொல்லப்போனாலும், அக்கதை ஆரோக்கியமாக இருக்கிறதா என்று செக்கிங் செய்ய, 18 பேர் கொண்ட கதை டாக்டர்கள் குழு ஒன்றை வைத்திருக்கிறாராம் கார்த்தி.

இந்த 18 கதை டாக்டர்கள் நியமிக்கப்பட்ட பிறகுதான் 'ஜப்பான்', 'வா வாத்தியார்', 'சர்தார்2' என்று தொடர்ந்து மூன்று முத்தான படங்களை அடுத்தடுத்து கார்த்தி வழங்கியிருக்கிறார் என்பதை இங்கே சொல்லியே தீரவேண்டியிருக்கிறது. அதாவது இந்தக் கதைகளை தேர்வு செய்கிற டாக்டர்கள் பட ரிலீஸூக்குப் பின்னரும் பத்திரமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தேர்வு செய்கிற கதைகள் பெரும்பாலும் உயிர் பிழைப்பதில்லை. 'சர்தார் 2'வுக்கு நடந்ததும் இதுதான்.

கார்த்தியின் தற்போதைய நிலையோடு ஒப்பிடுகிறபோது அவரது பிரதர் சூர்யாவின் நிலை பிரகாசமாகவே இருக்கிறது. பல ஆண்டுகளாகவே தொடர்ந்த தோல்விப்பயணத்துக்கு 'கருப்பு','விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படங்கள் முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றன. ஆனாலும் கார்த்தியும் சூர்யாவும் இன்று கதாநாயகர்களின் வரிசையில் முன்னணியில் இருக்கிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை என்பதே நிதர்சனம்.

ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோரை இப்பட்டியலில் கொண்டுவராமல் போனாலும் இந்த பிரதர்ஸூக்கும் முன்னால் விக்ரம், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்பு, ரவி மோகன், லேட்டஸ்ட் ஸ்டாரான சூரி ஆகியோர் இருக்கிறார்கள். இப்படி இருவரும் பின் தங்கியிருக்கக் காரணம், நாமும் சாதாரண நடிகர்கள்தான் என்பதைத் தாண்டி அதையும் தாண்டிய இமேஜூக்கு அநியாயமாக மெனக்கெடுவது.

பல வருடங்களாகவே புதிய சிந்தனையுடன் கதை சொல்ல வரும் அறிமுக இயக்குனர்கள் தங்களை அண்டவிடாமல் பார்த்துக்கொள்வது. தயாரிப்பாளர்கள் விவகாரத்திலும் பெரும்பாலும் உறவினர்கள் , நட்பு வட்டாரத்திலேயே புழங்கி, நல்ல தயாரிப்பாளர்களைக் கூட தவிர்ப்பது, தேர்வு செய்த இயக்குநர்களின் அத்தனை செயல்பாடுகளிலும் மூக்கை நுழைப்பது, என்று புகார்கள் பல கியூகட்டி நிற்கின்றன.

இனியாவது ரூட்டை மாத்தி உங்க இரும்பு கேட்டை கொஞ்சம் அகலத் திறந்துவிடுங்க பிரதர்ஸ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (3)

Ganesh
2026-09-18 08:24:55

எத்தனை வன்மம்


Aarbinms, Bangalorw
2026-09-17 18:26:23

திருட்டு குடும்பமும் சன் டிவி குடும்பமும் திரைத் துறையில் இருக்கும் வரை யாரையும் முன்னேற விடாமல் பார்த்துக் கொள்வார்கள்.


KayD
2026-09-17 14:54:24

சூரி எதையும் மறக்காத மறைக்காத கடின உழைப்பு அடையாள கோமண வெள்ளந்தி. சூர்யா கார்த்தி இருவரும் திறமையான கர்வம் கொண்ட கோமகன்(கள்). சூரி இன்னும் பல உயரங்களை தொடர்ந்து தொடுவார்