உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மால்கள், கல்லூரிகளில் சினிமா விழாக்களுக்குத் தடை விதிக்கக் கோரிக்கை

மால்கள், கல்லூரிகளில் சினிமா விழாக்களுக்குத் தடை விதிக்கக் கோரிக்கை


தமிழ் சினிமாவில் திரைப்பட விழாக்கள் என்பது பொதுவாக சில தியேட்டர்களில் நடக்கும் அல்லது அரங்குகளில், நட்சத்திர ஹோட்டல்களில் நடப்பதுதான் வழக்கமாக இருந்தது.

ஆனால், கடந்த சில வருடங்களில் கல்லூரிகள், மால்கள் ஆகியவற்றில் திரைப்பட விழாக்கள் நடப்பதும் வழக்கமாகி உள்ளது. படிப்பதற்காகக் கல்லூரிக்கு வரும் மாணவர்களை திரைப்பட விழாக்களில் பார்வையாளர்களாக அமர வைக்க அந்தந்த கல்லூரி நிர்வாகங்களே வலியுறுத்துகின்றன. பல லட்சம் பணம் கட்டி தங்கள் மகன்கள், மகள்களை கல்லூரிக்கு அனுப்பும் பல பெற்றோர் இம்மாதிரியான விழாக்களைத் தடை செய்ய வேண்டும் என ஏற்கெனவே கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த வாரம் சென்னையில் வேளச்சேரியில் உள்ள ஒரு மாலில் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் திரைப்பட விழா ஒன்று நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சில நூறு பேர் மட்டுமே கலந்து கொள்ள இடம் உள்ள அந்த இடத்தில் சில ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் ஒன்று கூடியுள்ளனர். இதனால், அந்த மாலில் மட்டும் நெரிசல் ஏற்படவில்லை. வேளச்சேரியைச் சுற்றி ஐந்து கிலோ மீட்டருக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளதைப் பார்க்க முடிந்தது.

மால்கள் என்பது கடைகள் இருக்கும் இடம், அல்லது தியேட்டர்களுடன் கூடிய வளாகமாக இருக்கின்றன. அங்கு இப்படி விழாக்களை நடத்தலாம் என்பதற்கான முறையான அனுமதியை அரசு நிரந்தரமாகவே வழங்கியுள்ளதா என்பதும் தெரியவில்லை.

வேளச்சேரியில் மட்டும் அன்றைய தினம் சினிமா விழா நடந்திருந்தால் நெரிசலில் பலர் சிக்கி மரணம் அடைந்திருக்கக் கூடும் என்று சொல்கிறார்கள்.

ஏற்கெனவே கரூர் நெரிசல் சம்பவம் தமிழக மக்கள் மனதில் ஒரு நிரந்தர காயத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் திரைப்பட விழாக்கள் நடத்துவதற்கான இடங்களாக மால்கள் மற்றும் கல்லூரிகள் ஆகியற்றை அனுமதிப்பதைத் தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் பலரும் கோரிக்கை வைக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !