உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அரசு பதவி பெற்ற விஜய்யின் திரையுலக நண்பர்கள்

அரசு பதவி பெற்ற விஜய்யின் திரையுலக நண்பர்கள்


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு, சில கட்சிகளுடன் ஆதரவில் முதல்வராகப் பதவியேற்றார் நடிகர் விஜய்.

அவர் பதவியேற்ற பின்பு அவரது நெருங்கிய திரையுலக நண்பர்களுக்கு அரசுப் பதவிகளை வழங்கி சிறப்பித்துள்ளார்.

விஜய்யின் மானேஜர் ஆகப் பணியாற்றி வந்த ஜெகதீஷ் என்பவருக்கு முதல்வரின் தனிச் செயலர் எனப் பதவி கொடுக்கப்பட்டது.

விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தைத் தயாரித்த கன்னடத் தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா, தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.

விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய மனோஜ் பரமஹம்சா தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியின் தலைவர் ஆகப் பொறுப்பேற்றார்.

விஜய் நடித்த 'பிகில், தி கோட்' படங்களின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி, கோயில்களுக்கான அறங்காவலர் தேர்வுக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த வருடத் துவக்கத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பாடிய பாடகர் வேல்முருகன் கோயில்களுக்கான அறங்காவலர் தேர்வுக் குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத், சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று தற்போது மீன் வளத்துறை அமைச்சராக இருக்கிறார்.

விஜய்யுடன் நீண்ட காலமாக உதவியாளராகப் பணியாற்றி வந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் சபரிநாதன், எம்எல்ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அரசு தலைமைக் கொறடா பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

விஜய்யின் நெருக்கமான வட்டங்களில் உள்ள சிலர் தங்களுக்கும் ஏதாவது அரசு பதவி கிடைக்கும் என காத்திருக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !