5 காட்சிகளை ஆரம்பித்து வைத்த முதல் படமாக 'பிளாஸ்ட்'
தமிழ் சினிமாவிலிருந்து சென்று தமிழக முதல்வராகப் பதவியேற்றுள்ள நடிகர் விஜய், இரண்டு வாரங்களிலேயே தமிழ் சினிமாவுக்காக புதிய அரசாணை ஒன்றைப் பிறப்பித்தார்.
அதன்படி ஒரு புதிய படம் வெளியான நாளிலிருந்து 7 நாட்களுக்கு தினசரி 5 காட்சிகளை நடத்திக் கொள்ளலாம் என்றும், சனி, ஞாயிறு, பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் 5 காட்சிகளை நடத்திக் கொள்ளலாம் என்றும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முன்பெல்லாம் புதிய படம் வெளியானால் சிறப்புக் காட்சியாக காலை 9 மணிக்கு நடத்திக் கொள்ள அரசின் அனுமதி பெற வேண்டும். அது தற்போது தேவையில்லை. மாநில அரசு நிரந்தர உத்தரவு பிறப்பித்துள்ளதால் 9 மணிக்கே காட்சிகளை ஆரம்பித்துக் கொள்ளலாம்.
அந்த விதத்தில் இன்று வெளியாகும் 'பிளாஸ்ட்' திரைப்படம் இந்த புதிய உத்தரவை ஆரம்பித்து வைக்கும் முதல் படமாக இருக்கிறது. இன்னும் ஒரு வார காலத்திற்கு தினசரி 5 காட்சிகளை இப்படத்தைத் திரையிடும் தியேட்டர்கள் நடத்திக் கொள்ள உள்ளார்கள்.
காட்சிகள் உயர்வு திரையுலகத்தினருக்கு மகிழ்ச்சிதான் என்றாலும் அதனால் முன்னணி நடிகர்கள்தான் அதிகம் பயன் பெறுவார்கள். அடுத்து கட்டண உயர்வையும் திரையுலகினர் எதிர்பார்க்கிறார்கள்.