'டான் 3' சர்ச்சையை சமரசமாக முடிக்க ரன்வீர் சிங் முயற்சி
நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த நான்கு மாதங்களில் 'துரந்தர்' படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன், அவரையும் முன்னணி ஹீரோ வரிசைக்கு உயர்த்தியுள்ளது. ஆனால் இந்த வெற்றியை அனுபவிக்க முடியாமல் 'காந்தாரா' படத்தின் 'தெய்வ கோலா' பாடல் குறித்து மிமிக்ரி செய்து சர்ச்சையில் சிக்கி, சமீபத்தில் தான் நீதிமன்ற உத்தரவுப்படி மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்று வழிபட்டு விட்டு வந்தார் ரன்வீர் சிங்.
இன்னொரு பக்கம் 'டான் 3' படத்தில் அவரும் பர்ஹான் அக்தரும் நடிப்பதாக முடிவு செய்யப்பட்ட நிலையில், அந்த படத்தில் கதை மற்றும் சில விஷயங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரன்வீர் சிங் விலகிக் கொண்டார். இதனால் அந்த படத்தை தயாரிக்கும் எக்செல் நிறுவனம் தங்களுக்கு கிட்டத்தட்ட 40 கோடி அளவில் நட்டம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டியது. அது மட்டுமல்ல தொழிலாளர் நலச் சங்கத்தை சேர்ந்தவர்களும் ரன்வீர் சிங் படங்களில் இனி பணியாற்ற மாட்டோம் என்று ஒரு மறைமுக தடையை நேற்றைய தினம் கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் இந்த பிரச்னையை சுமூகமாக தீர்க்க ரன்வீர் சிங் முயற்சியை ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி அவர் ஏற்கனவே இந்த படத்திற்காக பெற்றிருந்த 10 கோடி ரூபாய் முன்பணத்தை திருப்பி கொடுக்க முன்வந்துள்ளதாகவும், அது மட்டுமல்லாமல் தனது அடுத்த படத்தில் 25 கோடி தள்ளுபடி செய்து கொள்ளலாம் என்றும் அல்லது லாபத்தில் பங்கீடு செய்து கொள்ளவும் முன்வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் டான் 3 தயாரிப்பு நிறுவனமான எக்ஸெல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த சமரச பேச்சுக்கு உடன்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.