ஆலியா பட் சண்டை காட்சிகள்: ஆச்சரியப்பட்ட பாபி தியோல்
2012ல் 'ஸ்டூடண்ட் ஆப் தி இயர்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை ஆலியா பட். அடுத்து 'கங்குபாய் கதியவாடி' படத்தில் நடித்து தேசிய விருதும் பெற்றார். தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் ஆலியா பட், ஷிவ் ராவாலி இயக்கத்தில் 'ஆல்பா' எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். ஒய்.ஆர்.எப். ஸ்பை யுனிவர்ஸில் ஒரு பகுதியாக இப்படம் உருவாகியுள்ளது. நடிகர் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை ஷர்வாரியும் இன்னொரு நாயகியாக நடித்துள்ளார். ஜூலை 10ல் படம் ரிலீசாகிறது.
படம் குறித்து பாபி தியோல் கூறியதாவது: இரண்டு பெண்கள் சண்டையிடும் ஆல்பா மாதிரியான படத்தை இந்தியாவில் உருவாக்குகிறோம் என்பது அற்புதமாக இருக்கிறது. இந்தப் படம் மிகவும் புதியதாக, புத்துணர்ச்சியாக, பார்வையாளர்களுக்கு புதிய விருந்தாக அமையும். ஆலியா பட் மிகவும் கடினமான உழைப்பாளி. முழுமையான தயாரிப்புடன் ஒவ்வொரு காட்சியிலும் ஈடுபாட்டுடன் நடிப்பார். இதுமாதிரியான சண்டைக் காட்சிகளில் இதுவரை நடித்திராத ஆலியா எப்படி இதற்கு தயாரானார் என ஆச்சரியமாக இருக்கிறது. சண்டைக் காட்சிகள் மிகவும் கடினமானது. ஆலியா பட் தன்னுடைய அனைத்தையும் இதில் வழங்கியுள்ளார். இவருடன் இணைந்து பணியாற்ற வேண்டுமென பல நாட்கள் எதிர்பார்த்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.