உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதல்வர் நடிப்புக்கு முழுக்கு... முன்னாள் துணை முதல்வர் ரீ என்ட்ரியா?

முதல்வர் நடிப்புக்கு முழுக்கு... முன்னாள் துணை முதல்வர் ரீ என்ட்ரியா?

முதல்வர் விஜய் நடித்த குருவி( 2008) படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகம் ஆனவர் உதயநிதி. பின்னர் ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலமாக ஆதவன், மன்மதன் அம்பு, 7ம் அறிவு, நீர்ப்பறவை, வணக்கம் சென்னை உட்பட பல படங்களை தயாரித்தார். ரெட் ஜெயண்ட் நிறுவனம் மற்ற நிறுவனத்துடன் இணைந்து இந்தியன் 2, தக் லைப், விக்ரம் படங்களை தயாரித்தது. பல படங்களை ரிலீஸ் செய்து கொடுத்தது.

2012ம் ஆண்டு உருவான ‛ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தின் மூலமாக உதயநிதியும் ஹீரோ ஆனார். அந்த படம் வெற்றி பெற, கெத்து, இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா, கண்ணே கலைமானே, சரவணன் இருக்க பயமேன், சைக்கோ, பொதுவாக எம் மனசு தங்கம், நிமிர், மனிதன் உட்பட பல படங்களில் நடித்தார்.

அரசியலில் தீவிரமாக இறங்கி, எம்எல்ஏ ஆகி, அமைச்சர், துணை முதல்வர் ஆனதால், சினிமாவுக்கு முழுக்கு போட்டார். மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் (2023) அவர் நடித்த கடைசி படம். இப்போது அவர் எம்எல்ஏவாக, எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். கட்சியில் இளைஞரணி தலைவராக இருக்கிறார்.

3 ஆண்டுகளாக அவர் நடிக்கவில்லை. இந்த சூழ்நிலையில் உதயநிதி மீண்டும் நடிக்கப் போகிறார் என்று தகவல்கள் கசிகின்றன. நேரம் இருப்பதாலும், மன ரிலாக்ஸ்காகவும் ஆண்டுக்கு சில படங்களில் நடிக்கப் போகிறார். அவரை வைத்து படம் தயாரிக்க கமல்ஹாசன் முயற்சித்தார். அது நடக்கவில்லை. அந்த ஆதங்கத்தை மாமன்னன் மேடையில் சொன்னார். இப்போது அந்த கதையை எடுக்கப் போகிறார். இயக்குனர், மற்ற நடிகர்கள் விவரம் விரைவில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வருகின்றன. அவரை வைத்து படம் இயக்க ஓகே ஓகே இயக்குனர் ராஜேஷ், மாரி செல்வராஜ் உட்பட பலர் ரெடி என்கிறார்கள்.

இது குறித்து உதயநிதி தரப்பில் விசாரித்தால், அவர் அரசியலில் பிஸி. கட்சியில் 2வது பெரிய இடத்தில் இருக்கிறார். எதிர்க்கட்சி தலைவராக பணிகள் அதிகம். கட்சியை அடுத்தகட்டத்துக்கு எடுத்த செல்ல வேண்டும். ஆகவே, அவர் சினிமாவில் மீண்டும் நடிக்க வாய்ப்பு இல்லை. அவர் சினிமாவுக்கு வந்தால் மீண்டும் பிரச்னைகள், கிசுகிசுகள் வரும். அது கட்சிக்கு, அவரின் இமேஜ்க்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதை அவர் விரும்பவில்லை. அதேசமயம், அவர் மகன் இன்பன் உதயநிதி விரைவில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு என்கிறார்கள். ஆனாலும், நடிப்பு விஷயத்தில் உதயநிதி பதிலே பல கேள்விகளுக்கு விடை சொல்லும் என்றும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !