உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராஜினாமா செய்த திரிஷ்யம் நடிகை பகிரங்க குற்றச்சாட்டு ; நடிகர் சங்கத்திற்குள் சலசலப்பு

ராஜினாமா செய்த திரிஷ்யம் நடிகை பகிரங்க குற்றச்சாட்டு ; நடிகர் சங்கத்திற்குள் சலசலப்பு


மலையாளத் திரையுலகில் நடிகர்களுக்காக 'அம்மா' என்கிற பெயரில் செயல்பட்டு வரும் நடிகர் சங்கத்திற்கு கடந்த வருடம் தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவராக நடிகை ஸ்வேதா மேனன் தேர்வு செய்யப்பட்டார். அதேசமயம் அந்த தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாகவே இணைச் செயலாளராக நடிகை அன்சிபா ஹாசன் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.. இவர் 'திரிஷ்யம்' படத்தில் மோகன்லாலின் மூத்த மகளாக நடித்து பிரபலமானவர்.

சமீபத்தில் தனது பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாகவும், சொந்த வேலைகள் மற்றும் படப்பிடிப்பு சம்பந்தமான பணிகள்தான் இதற்கு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார் என்றும் நடிகர் சங்கத்திலிருந்து தகவல் வெளியானது.. இந்த நிலையில் சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் சங்கத்தில் தனக்கு அளிக்கப்பட்ட மன உளைச்சல்தான் தன்னுடைய ராஜினாமாவுக்கு காரணம் என பகிரங்கமாக கூறியுள்ளார் அன்சிபா ஹாசன்.

இதுகுறித்து அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறும்போது, ''குணச்சித்திர நடிகரான டினி தாம் என்பவர் நடிகர் சங்க பொறுப்பில் இருக்கிறார். தனக்கென ஒரு கூட்டத்தை அவர் அங்கே சேர்த்து வைத்திருக்கிறார். ஒரு பெண்ணின் நற்பெயரை கெடுக்க எளிய வழி, அவருக்கு சங்க உறுப்பினர்களுடன் தவறான தொடர்பு இருப்பதாக கதை கட்டுவதுதான் என்கிற ரீதியில் அவர்தான் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மிகவும் அவதூறாக வதந்திகளை பரப்பியுள்ளார்.

எனக்கு எதிராக சங்க பெண் உறுப்பினர் ஒருவர் மூலம் புகார் அளிக்க வைத்து, அதன் காரணமாக போலீஸ் விசாரணை என்கிற பெயரில் காவல் நிலையத்தில் நான் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் அலைக்கழிக்கப்பட்டேன். இதெல்லாம் எனக்கு மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியது. மத அமைப்பு ஒன்று நடிகர் சங்கத்திற்கு பண உதவி செய்ய டினி தாம் மூலமாக முன்வந்ததை நான் எதிர்த்ததுதான் தன் மீதான இந்த அவதூறு பிரச்சாரம் செய்வதற்கு காரணமாக அமைந்தது.

அது மட்டுமல்ல, சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற அம்மா குடும்ப விழாவிற்கு முந்தைய நாள் இரவு நடிகை நீனா குறூப் என்பவரை தகாத வார்த்தைகளால் பேசி அடிக்க முயற்சித்தார்.. அங்கிருந்தவர்கள் அதை தடுத்ததால் நீனா குரூப் தாக்குதலுக்கு ஆளாகாமல் தப்பித்தார். இது குறித்து நான் வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டதற்கு தலைவர் ஸ்வேதா மேனன் இது சங்கத்திற்கு சம்பந்தமில்லாத விஷயம் என்று அலட்சியம் காட்டினார். இதை தொடர்ந்தே சங்கத்தின் பொறுப்பிலிருந்து விலகினேன்” என்று கூறியுள்ளார்.

நடிகர் சங்கத்திற்குள் நடக்கும் அதிகார சண்டைதான் இந்த பிரச்னையின் பின்னணி என்றும், ஒரு பெண் தலைவியாக இருந்தாலும் பெண் உறுப்பினரின் நலனை கருத்தில் கொள்ளாமல் சிலர் சொல்வதை கேட்டு நடக்கிறார் ஸ்வேதா மேனன் என்றும் இரு தரப்பின் விவாதம் மலையாளத் திரையுலகில் நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !