மக்கள் காவலன் படத்தில் பாடிய அதிதி ஷங்கர்
குடும்பஸ்தன் படத்தை அடுத்து மணிகண்டன் நடிப்பில் உருவாகி வரும் மக்கள் காவலன் படத்தின் முதல் பாடலைப் படக்குழுவினர் வெளியிட்டனர். இக்னோர் எனத் தலைப்பிடப்பட்டுள்ள இப்பாடல், நாட்டுப்புற இசையின் பின்னணியில் ராப் பாடலாக உருவாகியுள்ளது. நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இப்பாடலுக்கு எம்.கே.பாலாஜி பாடல் வரிகளை எழுதியுள்ளார். ராப் பாடகர் யோகி பி, இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோருடன் நடிகை அதிதி ஷங்கரும் இப்பாடலைப் பாடியுள்ளார். பாடலின் வீடியோவில், அதிதி நாட்டுப்புறப் பகுதிகளைப் பாடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த பாடல் பதிவின் போது, யோகி பி-யுடன் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்து அதிதி வெளியிட்ட பதிவில், ‛‛நிவாஸ் கே பிரசன்னா இசையில் கோட் யோகி பி-வுடன் இணைந்து சில வரிகளைப் பாடும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு மிக்க நன்றி. இது மிகவும் சிறப்பானது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
சந்தோஷ் குமார் எழுதி இயக்கியுள்ள மக்கள் காவலன் படத்தில் மணிகண்டன் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். 2017-ம் ஆண்டு மாதவன் - விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'விக்ரம் வேதா' படத்தில் காவலராக நடித்திருந்த மணிகண்டன், இப்படத்தின் மூலம் மீண்டும் காவலர் வேடத்தில் நடிக்கிறார்.
வாகை சந்திரசேகர், திவ்யா ஸ்ரீபாதா, ஏ. வெங்கடேஷ், ஆர்.கே. விஜய் முருகன், சண்முகம் முத்துசாமி, சாபுமோன், உன்னிமாயா பிரசாத், ஜென்சன் திவாகர், லல்லு, ஜெமினி மணி மற்றும் ரகு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற டிசம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.