உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சினிமா எப்போதும் என் வாழ்க்கையில் முக்கியமான ஓர் அங்கம் : ஈஷா தியோல்

சினிமா எப்போதும் என் வாழ்க்கையில் முக்கியமான ஓர் அங்கம் : ஈஷா தியோல்

தர்மேந்திரா - ஹேமமாலினி தம்பதியரின் வாரிசான நடிகை ஈஷா தியோல் ஓராண்டு இடைவெளிக்கு பின் ‛பிரதாப்' படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். சச்சின் சரப் இயக்கி உள்ள இப்படத்தில் அமித் சாத் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். நவ., 20ல் படம் திரைக்கு வருகிறது. இந்த படம் குறித்து ஈஷா தியோல் அளித்த பேட்டி...

'பிரதாப்' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்?

'பிரதாப்' படத்தின் கதை பல அடுக்குகளைக் கொண்டது. குறிப்பாக, அதன் உணர்வுப்பூர்வமான அம்சங்களும், முதிர்ச்சியான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பும் என்னைக் கவர்ந்தன. ஒரு நடிகையாக எனது வித்தியாசமான பரிமாணத்தை வெளிப்படுத்த இது நல்ல வாய்ப்பாக அமைந்தது.

உங்கள் கதாபாத்திரம் குறித்து?

பூனம் என்ற எனது கதாபாத்திரம் பல்வேறு உணர்வுகளைக் கொண்டது. கணவரின் புகழால் அடையாளம் பெற்ற அவள், சூழ்நிலைகள் மாறும்போது புதிய சவால்களை எதிர்கொள்கிறாள். தன்னை மீண்டும் அடையாளம் கண்டு வாழ்க்கையில் முன்னேறப் போராடும் பெண்ணின் உணர்வுப்பூர்வமான பயணம் இது.

அமித் சாத் உடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

அமித் சாத் மிகச்சிறந்த நடிகர். அவர் அறிமுகமான காலத்திலிருந்தே அவரது நடிப்பைக் கவனித்து வருகிறேன். அவரது நடிப்பின் மீது எப்போதும் எனக்கு மதிப்பு உண்டு. தற்போதைய தலைமுறை நடிகர் ஒருவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்தது. அந்த வாய்ப்பு அமித் மூலம் கிடைத்ததில் மகிழ்ச்சி. தனது நடிப்புத் தொழிலில் அவர் காட்டும் அர்ப்பணிப்பும் நேர்மையும் பாராட்டுக்குரியவை. அவருடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது. 'பிரதாப்' கதாபாத்திரத்தில் அவர் மிகச்சிறப்பாக நடித்துள்ளார்.

திரைத்துறையில் பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர் நீங்கள். அது இப்போதைய படத் தேர்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா?

சினிமா எப்போதுமே எனது வாழ்க்கையில் முக்கியமான ஓர் அங்கமாக இருந்து வருகிறது. திரைப்படங்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட குடும்பத்தில் வளர்ந்ததால், சினிமா கலை குறித்த புரிதலும் ரசனையும் இயல்பாகவே எனக்கு ஏற்பட்டது. இருப்பினும், கேமரா முன்பு நிற்கும்போது ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் என்னுடைய தனித்துவமான அணுகுமுறையிலேயே கையாள விரும்புகிறேன். தற்போது நான் தேர்வு செய்யும் படங்கள், கதைகள், கதாபாத்திரங்கள் மற்றும் என்னுடன் பணியாற்றும் கலைஞர்கள் ஆகியவற்றைப் பொறுத்தே அமைகின்றன. ஒரு நடிகையாக எனக்கு உற்சாகத்தையும், புதிய அனுபவங்களையும் தரக்கூடிய படங்களில் இடம்பெறவே விரும்புகிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !