உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வாக்குகளை சென்னையில் வைத்திருக்கும் நட்சத்திரங்கள்

வாக்குகளை சென்னையில் வைத்திருக்கும் நட்சத்திரங்கள்


தமிழ் சினிமாவில் மற்ற மொழிகளிலிருந்தும் நடிகர்கள், நடிகைகள் நடிக்க வருகிறார்கள். இங்குள்ள சிலரும் வேறு மாநிலங்களுக்குச் சென்றும் செட்டில் ஆகிறார்கள். இருந்தாலும் அவர்கள் சென்னையில் தான் தங்களுக்கு வாக்குகளை வைத்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியம்தான்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, மும்பையைச் சேர்ந்த நடிகையான ஜோதிகாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களுக்கு முன்பு அவர் குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆனார். இருந்தாலும் சென்னையிலேயே அவர்கள் தங்களது வாக்குகளை வைத்திருக்கிறார்கள். இன்று காலை சென்னை, தி நகரில் தங்களது வாக்குகளை சூர்யா, ஜோதிகா பதிவு செய்தனர்.

தமிழில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் மும்பையைச் சேர்ந்த சிம்ரன். அவர் தொடர்ந்து சென்னையில்தான் வசித்து வந்தார். ஆனால், சில வருடங்களுக்கு முன்பு மீண்டும் மும்பைக்கே சென்றுவிட்டார் என்றார்கள். ஆனால், இன்று சென்னையில் வாக்களித்தது பற்றி போட்டோவுடன் பதிவு செய்திருந்தார்.

நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் கடந்த சில வருடங்களாகவே மும்பையில் தனியாக வசித்து வருகிறார். ஆனால், தேர்தல் வரும் போதெல்லாம் தவறாமல் சென்னைக்கு வந்து வாக்களிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். இன்றும் தன்னுடைய அப்பா கமல்ஹாசனுடன் சென்னையில் வாக்களித்தார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் கேரளாவைச் சேர்ந்தவர். ஆனால், கல்லூரிப் படிப்பை சென்னையில்தான் படித்தார். அதன் பிறகு சென்னையில்தான் வசித்து வருகிறார். இன்று சென்னையில் தன்னுடைய வாக்கை அவர் பதிவு செய்தார்.

இயக்குனர் அட்லீ 'ஜவான்' படத்திற்குப் பிறகு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். இருந்தாலும் ஓட்டு போடுவதற்காக சென்னைக்கு வந்து தன்னுடைய வாக்கைப் பதிவு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !