உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பேசும் மற்றும் கேட்கும் திறனை மீட்டுத் தந்த மம்முட்டி : நெகிழ வைத்த குழந்தைகள் சந்திப்பு

பேசும் மற்றும் கேட்கும் திறனை மீட்டுத் தந்த மம்முட்டி : நெகிழ வைத்த குழந்தைகள் சந்திப்பு

நடிகர் மம்முட்டி ஒரு பக்கம் சினிமாவில் பணம் சம்பாதித்தாலும், இன்னொரு பக்கம் அறக்கட்டளை மூலமாக ஏராளமான நபர்களுக்குத் தொடர்ந்து உதவி செய்து வருகிறார். குறிப்பாக கேரளாவில் பிரசித்தி பெற்ற ராஜகிரி மருத்துவமனையுடன் இணைந்து மம்முட்டியின் கேர் அண்ட் ஷேர் அறக்கட்டளை பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் காதோடு காதோரம் என்கிற திட்டத்தின் மூலமாக கேட்கும் திறன் மற்றும் பேசும் திறன் அற்ற குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்களுக்குக் கேட்கும் திறனும் பேசும் திறனும் கிடைக்க கூடிய உயரிய சேவையை மம்முட்டி தொடர்ந்து செய்து வருகிறார்.

அப்படிச் சிகிச்சை முடிந்து பலன் பெற்ற குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் அனைவரும் சமீபத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் மம்முட்டி எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென கலந்து கொண்டு வந்திருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார். மம்முட்டியை நேரில் பார்த்த அவர்கள் கண்கலங்க தங்களது நன்றியை தெரிவித்தனர்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அவர்களுடன் செலவிட்ட மம்முட்டி, அனைவருடனும் பொறுமையாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் அங்கிருந்த குழந்தைகளின் சிலேட்டுகளில் தனது கைப்பட அம்மா என்று அழகான வார்த்தையை எழுதிக் கொடுத்தார். அதைப் பார்த்த பெற்றோர் நெகிழ்ச்சியில் கண்கலங்கினார்கள். அதுமட்டுமின்றி அந்த நிகழ்விற்கு வந்திருந்தவர்களுக்கென தயாரிக்கப்பட்ட சிறப்பு பிரியாணியையும் மம்முட்டி தன் கைப்படப் பரிமாறி அவர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !