பாராட்டினார் விஜய்சேதுபதி: பீல் பண்ணுகிறார் வீஜே பார்வதி
மணிகண்டன், அஜித்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. ஆனாலும் இந்த குழுவினர் சமீபத்தில் வெற்றி விழாவை கொண்டாடிவிட்டனர். அதில் விஜய் சேதுபதி பேசியது,
''இந்த புராஜக்ட் எனக்கு ரொம்ப சந்தோஷமான அனுபவம். நாங்க பண்ணுற வேலை எல்லாருக்கும் நிறைவாக இருக்கனும் என்று தான் நானும் மணிகண்டனும் திட்டமிட்டோம். இடையில் இது நின்று விட்டது என்ற நிலை வந்த போதும், அதுவாக மீண்டும் நடந்து இந்த இடத்தை வந்தடைந்திருப்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.
இந்தக் கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தனி கதை இருக்கு. ஒவ்வொரு காட்சியும் ஒரு வாழ்க்கையைச் சொல்லும் மாதிரி இருக்கும். அதுதான் இந்த புராஜக்டை எனக்கு ரொம்ப ஸ்பெஷல் ஆக்குது. இந்தக் கதாபாத்திரம் ஒரு சாதாரண மனிதனோட வாழ்க்கையை பிரதிபலிக்குது. எந்த பெரிய விஷயங்களும் இல்லாமல், சிம்பிளான வாழ்க்கையிலேயே எவ்வளவு அழகு இருக்குன்னு காட்டுது.
இயக்குனர் மணிகண்டன் தான் அஜித்குமாரை அறிமுகப்படுத்தினார். இந்த படைப்பில் உழைத்த அத்தனை பேரும் முழு அர்ப்பணிப்போடு உழைத்தார்கள். கதை நம்ம வாழ்க்கையோட நெருக்கமாகவும் இருந்தது. அதனால அந்த கேரக்டருக்குள் போவது எனக்கு ரொம்ப ஈஸியாக இருந்தது. மணிகண்டன் கூட்டி வந்தவர் நடிகர் முத்துகுமார். பொறாமைப்படும் அளவு நடிப்பை கொட்டியிருக்கிறார். வடிவேல் முருகன் என்னை ஆச்சரியப்படுத்தினார். அவர் பட விமர்சனம் செய்பவர் எப்படி நடிப்பார் என நினைத்தேன். ஆனால் அதைத்தாண்டி அசத்திவிட்டார். பார்வதியும் அவர் கதாப்பாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருந்தார்.
செட்டில் நாங்க எல்லாரும் ஒரு பேமிலி மாதிரி தான் இருந்தோம். ஒவ்வொருத்தரும் ஒருத்தரை சப்போர்ட் பண்ணி தான் இந்த படைப்பை முடித்தோம்'' என்றார்.
நடிகை வீஜே பார்வதி பேசுகையில், ''இது என்னோட முதல் வெற்றி விழா. இந்தக் கதையில் 'லலிதா' என்ற கதாபாத்திரம் எனக்கு கிடைத்ததுக்குப் பிறகு, மக்கள் என்னைப் பார்க்கும் பார்வையே மாறி விட்டது. 'அந்த ஊர்க்காரப் பொண்ணு மாதிரி ரொம்ப நிஜமா, அழகா செட்டாகிட்டீங்க'ன்னு சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷம். என்னுள்ளே இருந்த இன்னொரு முகத்தை வெளியே கொண்டு வர இந்த வாய்ப்பு உதவியது. அதற்காக ரொம்ப நன்றி. இந்த சீரிஸில் விஜய் சேதுபதி சாருடன் இணைந்து நடிக்க முடியாமல் போனது வருத்தம்தான். அடுத்தடுத்த படைப்புகளில் நடக்கும் என நம்புகிறேன்'' என்றார்.