உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அல்லு அர்ஜுன் - அட்லி படத்தின் தலைப்பு 'ராக்கா'

அல்லு அர்ஜுன் - அட்லி படத்தின் தலைப்பு 'ராக்கா'

அட்லி இயக்கத்தில், சாய் அபயங்கர் இசையமைப்பில், அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்கும் அவரது 22வது படத்தின் தலைப்பு, 'ராக்கா' என அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தலைப்பு அறிவிப்புடன் படத்தின் முதல் பார்வையையும் வெளியிட்டுள்ளார்கள். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, பெங்காலி, உருது ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

'புஷ்பா 2' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம், 'ஜவான்' படத்திற்குப் பின் அட்லி இயக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகும் போதே அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. 'புஷ்பா 2, ஜவான்' இரண்டுமே 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்த படங்கள்.

தமிழ் இயக்குனரான அட்லியுடன் அல்லு அர்ஜுன் இணைந்தது தெலுங்கு திரையுலகத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இப்படத்தை உலக அளவில் கொண்டு சேர்க்கும் அளவில் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார்கள். அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் பர்ஸ்ட்லுக் பார்க்கையில் அல்லுஅர்ஜூன், சூப்பர்மேன் கேரக்டரில் நடிக்கிறார் என்றும் தெரிகிறது. ஆக்ஷன் கலந்த பேன்டஸி ஜானரில் 'ராக்கா' உருவாகிறது. மனித முகம், மிருக கையுடன் வித்தியாசமான தோற்றத்தில் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. கதைப்படி அல்லு அர்ஜூன் இன்னும் சில கெட்அப்களில் வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !