/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
அயலகப் புகழ் "கூடல் கலைக்கூடம்" வெள்ளிவிழா
/
அயலகப் புகழ் "கூடல் கலைக்கூடம்" வெள்ளிவிழா
டிச 26, 2024

கலைவழி மனித நேயம் வளர்ப்போம்! கலையே அனைத்து விடுதலைக்குமான திறவுகோலாக அமையும்!கலைகள்வழி உடல் நலமும் மனநலனும் பெற்று விழுமியங்களுடன் கூடிய முழுமையான வாழ்வைப் பெறமுடியும். நாளைய சமுதாயம் பண்புநிறைந்த சுமூகமாக மாறும் முதலிய பல்வேறு கருத்துகளை மையப்படுத்தி கூடல் கலைக்கூடத்தின் 25 ஆம்ஆண்டு வெள்ளி விழா நடைபெற்றது.
அமெரிக்காவைச் சேர்ந்த கொம்பு மரபிசை மற்றும் ஆராய்ச்சி மையத்தினர் விழாவின் தொடக்கமாக தவில், நாதசுரத்துடன் மங்கள இசை வழங்கினர். குழந்தைகள்,மாணவர்கள், இளையோர் எனப் பலரும் பங்குபெற்றனர். கரகம், ஒயில், பறையாட்டம் முதலியபல்வேறு கலை நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டன. சிங்கப்பூர், மலேசியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் கலைப் பயிற்சிகள் வழங்கும் பலர் தங்கள் வாழ்த்துகளை இணைய வழி வழங்கினர். தமிழ் மொழி - கலைகள்- தனித்திறன் என இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள் முதலானவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கி, உலகம் முழுமையும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று மானுடம் போற்றும் உயர்ந்த பெரும் வாழ்வியல் மரபை வழங்கியது தமிழ் மரபாகும். தமிழ்-தமிழர்தம் மொழி, வரலாறு, கலை,இலக்கியம், பண்பாடு, அறிவியல் மற்றும் தத்துவ மரபு முதலியவற்றைக்கொண்டு, உலகப் பொதுநலன் வேண்டி நிற்பதாகும். உலகம் முழுமையும் பரந்து வாழ்கின்ற தமிழ்ப் பெருமக்கள், தமிழ் மொழியை- தமிழ்க் கலைகளை அதன் சிறப்பை- தமது நேரிய வாழ்வியல் முறையால், தொடர்ந்து அடையாளமாய்ப் பாதுகாத்து வருகின்றனர். மேலும் நவீனத் தொழில் நுட்ப உதவியோடு அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு செல்லப் பணிசெய்து வருகின்றனர். அந்த முறையில் இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழின் தொல்மரபை, இயற்கையின் பாற்பட்ட வாழ்க்கையின் விளைபொருளாய் உருவான முத்தமிழை, மக்களின் கலையாகச் செவ்வியல் தன்மையோடு பாதுகாத்து, முழுமையாக, அடுத்துவரும் தலைமுறையினர்க்கு வழங்க வேண்டி உள்ளது.
இதனையே மரபுத் தொடர்ச்சி என்கிறோம். இத்தொடர்ச்சி,உடல் அமைப்பில் மட்டுமல்லாது, உணர்வின்-அறிவின்தொடர்ச்சியாகவும் அமையும். அதன் அடிப்படையில் மொழி, மரபுக்கலைகள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சியாக வழங்கப்படும் சூழலில், இளைய தலைமுறையினரிடம் தமிழ்மரபு கற்பிக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.
தமிழ் மரபுக் கலைஞர்களின் உதவியோடு கலைப் பயிற்சிகளை வழங்க வேண்டும். அப்பயிற்சியின் அனுபவங்களை உறுதிசெய்திட வேண்டும். இதன்வழி, தமிழ்க் கலைகள், தமிழர்தம் மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் முதலிய வாழ்வியல் கூறுகள் பாதுகாக்கப்படும்.
ஒருவர், கலை ஒன்றைக் கற்றுக் கொள்ளும் பொழுது, உடல் இயக்கங்களின் வழியான பயிற்சியால் உடல் வலிமை பெறுகிறது. உடல் வலிமை அடைகிற போது, மனம்- வலிமையும் உறுதியும் பெறுகிறது. இது நலங்கள் நிறைந்த வளமான வாழ்வுக்கு வழி வகுக்கிறது என்று மலேசிய ஜோபா கலைமையத்தின் தேசிய நிலை இயக்குநர் மனோகரன் தன் உரையில் குறிப்பிட்டார்.
தமிழ் இசைப்பாடகர் இராஜா முகமது இசைக் கலையின் அழகு, நுட்பம் கற்றுக்கொள்வதில் மாணவர்கள் பெறும் தனித்திறன்- நம்பிக்கை வளர்ச்சி குறித்துப் பேசினார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஐ பாட்டி நிறுவனத்தின் இயக்குநர் குமார், தமிழ் மரபுக்கலைகள், தற்காப்புக் கலைகள், விளையாட்டுகள் மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அப்பொழுது மரபுவழி அறிவுடன் கூடிய கற்றல்- கற்பித்தல் நிகழும். இது எதிர்காலச் சந்ததியினரை உடல்நலம், மனநலம் மற்றும் நம்பிக்கை கொண்டவர்களாக வளர்த்தெடுக்கும் எனக் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் ஆசிரியர் கலைவாணி தம் உரையில், வெளி நாடுகளில் தமிழ் மரபுக் கலைகள் எத்தகைய நிலையில் வைத்துப் போற்றப் படுகின்றன என்பதை அறிந்து, புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாட்டில், தமிழ் மரபுக்கலைகளைப் பயிற்றுவித்துப் பாதுகாக்கும் கலைத்திட்டத்தைச் செய்யவேண்டும். தமிழர்தம் மரபுக் கலைகளில் அமைந்துள்ள சிறப்புக்களை, வாழ்விடச் சூழலில் பிற சமூகத்தவர்களும் உணர்ந்து கொள்ளும் வகையில் அவற்றின் பெருமைகளை எடுத்துச் சொல்வதன் மூலம் தமிழ் மரபு பாதுகாக்கப்படும்.
இந்திய -தமிழகச் சூழலில் பாதுகாக்கப்படும் மரபுக் கலைகள் குறித்த தகவல்களை அறிந்து கொள்வதோடு, அவற்றைக் கற்றுக்கொண்டு பாதுகாக்கும் வழிமுறைகளை ஆய்வுப்பூர்வமாக விவாதித்து அறிந்து கொண்டு, தமிழ்க் கலைமரபுகள் அறிமுகம்- பயிற்சி அளித்தல்-, தனித்திறன் வளர்த்தல்-, கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்துதல் முதலிய செயல்பாடுகளின் அடிப்படையில், பயிற்சிகளை- பட்டறைகளை வழங்குவது வரலாற்று முக்கியத்துவம் உடையதாக அமையும். அதுமட்டுமன்றி, படைப்பும் கற்பனையும் மாணவர்களின் படைப்பாற்றலையும் கற்பனைத் திறனையும் அழகியல் உணர்வையும் வளர்க்கும்.
சிறப்பாக, பல்லாங்குழி, தாயம், பம்பரம், சொட்டாங்கல், கோலிக்குண்டு, நொண்டியடித்தல், பாண்டிஆடுதல்,ஓடிப்பிடித்தல்,குலை குலையா முந்திரிக்கா, ஒரு குடம் தண்ணி எடுத்து முதலிய தமிழ் மரபு விளையாட்டுக் கலைகள் வழி, தலைமைத்துவப் பண்பினை (Leadership Quality)வளர்த்தல், ஒற்றுமை( Unity) , விட்டுக் கொடுத்தல், பொறுமை( Tolerance), திட்டமிடுதல்(planning), புரிந்து கொள்ளுதல் ( Understanding), வெற்றி தோல்வியைச் சமமாகப் பாவித்தல் ( Balancing) முதலிய பல்வேறு விழுமியங்களை (Values) இளையதலைமுறையினர் பெறுவார்கள்.
இவை மட்டுமல்லாமல் இந்த விளையாட்டுகள் வழி, மொழி, கணிதம், அறிவியல், நுண்ணறிவு முதலிய செயலறிவுத் திறனையும் பெறுவார்கள். தமிழ் மரபைப் போற்றிப் பாதுகாக்கவும் மதிப்பு மிக்க பண்பாட்டை அறியவும் கற்றுக் கொள்ளவும் இதுபோன்ற விழாக்கள் ஒரு வாய்ப்பாக அமையும்.
தமிழ் மரபுக் கலைகளை- கலைப் பொருட்களைத் தொட்டுக் கற்கும் வாய்ப்பு ஏற்படும் பொழுது, தமிழ்க் கலைகள், தமிழ் இசை-தமிழ் மரபு விளையாட்டுகள் வழி விழிப்புணர்வு அடைந்து முழுத்திறன் பெற்று வளர்வார்கள்.
தமிழ் மரபை உலகளாவிய அளவில் கொண்டு செல்லும் பெருமுயற்சியை கூடல் கலைக்கூடம் எடுக்க வேண்டும் என்று பேசினார்.
விழாவிற்கு வந்திருந்தவர்களை கூடல் கலைக் கூடத்தின் இயக்குநர் அழகுஅண்ணாவி வரவேற்றார். பயிற்றுநர் முனைவர் சு.முத்தையா நன்றி கூறினார். தலைமைப் பயிற்றுநர் சை. பிரான்சிஸ் விழாவை ஒருங்கிணைத்து இருந்தார். செய்திப் பகிர்வு: முனைவர் அழகு அண்ணாவி
- நமது செய்தியாளர் முருகவேலு வைத்தியநாதன்
Advertisement