/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
வட அமெரிக்க வரவேற்பறையில் முனைவர் க. திலகவதி
/
வட அமெரிக்க வரவேற்பறையில் முனைவர் க. திலகவதி
டிச 30, 2024

வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் மன்றமும் வலைத்தமிழ் இணையத் தொலைக்காட்சியும் இணைந்து நடத்தும் “வட அமெரிக்க வரவேற்பறை” நிகழ்ச்சி, தமிழ் இலக்கியவாதிகள், ஆய்வாளர்கள், அறிஞர்கள் ஆகியோரின் நட்புறவையும், பண்பாட்டுப் பரிமாற்றத்தையும் வளர்க்கும் ஓர் அரிய வாய்ப்பாக விளங்குகிறது. பிற நாடுகளிலிருந்து வருகை புரியும் தமிழ் அறிவுத்துறைச் சாதனையாளர்களை நேர்காணல் செய்து அவர்களின் எண்ணங்களையும் அனுபவங்களையும் உலகத் தமிழர்களுடன் பகிர்ந்து கொள்வது இதன் முக்கிய நோக்கமாகும்.
அந்த வரிசையில், 2024 ஆம் ஆண்டின் டிசம்பர் 28ஆம் தேதி, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கு வருகை தந்திருந்த பேராசிரியர் முனைவர் க. திலகவதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்நிகழ்வின் நெறியாளர்களாகப் பேராசிரியர் மேகலா இராமமூர்த்தியும், புதுவை முருகுவும் (முருகவேலு வைத்தியநாதன்) செயல்பட்டனர். கவிஞர் மருதயாழினி பிரதீபா வழங்கிய வரவேற்புரை நிகழ்வுக்கு மேலான தொடக்கமாக அமைந்தது.
முனைவர் க. திலகவதி - தமிழின் பண்பாட்டுத் தூணின் உருவகம்
திலகவதி, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத்துறை, கட்டடக்கலைத் துறையின் தலைவராகப் பணியாற்றியவர். தமிழின் பண்பாட்டுச் செழுமையை உலக அளவில் பரப்பும் முயற்சியில், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய், தைவான், மொரிசியசு, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தமிழ்ச் சொற்பொழிவுகளை வழங்கி, தமக்கான இடத்தைப் பெற்றவர். மேலும், தமிழில் 20க்கும் மேற்பட்ட இலக்கிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
இவர் முப்பதுக்கும் மேற்பட்ட முனைவர்களையும் 140க்கும் அதிகமான ஆய்வியல் நிறைஞர்களையும் உருவாக்கியிருக்கிறார். தமது அர்ப்பணிப்புக்கான அங்கீகாரமாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் “முன்னோடிப் பெண்மணி விருது”, “வளர்தமிழ் மாமணி விருது” (பன்னாட்டுத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம்), “தமிழ்மாமணி விருது” (திருச்சி புத்தகத் திருவிழா) உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். திருச்சி, தஞ்சை, சென்னை ஆகிய பகுதிகளில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளில் உறுப்பினராகவும் தலைவராகவும் செயலாளராகவும் தன்னார்வப் பணிகளைத் தொடர்கிறார்.
தமிழின் மீதான திலகவதியின் பார்வை
முனைவர் திலகவதி, தமிழ் வளர்ச்சிக்குக் குடும்பத்தின் பங்களிப்பு மிக முக்கியமானது என்று வலியுறுத்தினார். “தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நேரத்தை வீணாக்காமல், குழந்தைகளுக்குத் தமிழின் சுவையை அறிமுகப்படுத்தும் வகையில் புதிய முறையை உருவாக்க வேண்டும்,” என்றார்.
தமக்கு மருத்துவப் படிப்பிற்கு வாய்ப்புக் கிடைத்தும் குடும்பச் சூழல் காரணமாகத் தமிழ்ப் படிப்பை மேற்கொண்டதாகவும் தமது இளமைக் காலத் தமிழ் உணர்விற்கு வித்திட்டது தம் ஆறாம் வகுப்பின் தமிழ் ஆசிரியர் சி. அலமாப்பிரபு என்பதையும் குறிப்பிட்டார்.
இன்றையக் கணினி வளர்ச்சியோடு தமிழும் சேர்ந்து வளர அனைத்துத் தமிழ் ஆர்வலர்களும் தம் தகுநிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும். நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் தமிழை இணைத்துப் பயன்படுத்த, தமிழ் ஆர்வலர்கள் தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். சுவாமிமலையில் முருகனிடத்தில் சிவபெருமான் பாடம் கற்றுக் கொண்டது போல் பெரியவர்கள் இன்றைய தலைமுறையினரிடமிருந்து புதிய தகவல் நுட்பங்களைத் தயங்காமல் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது போன்ற பல கருத்துக்களை வெளிப்படுத்தினார்.
“மகாகவி பாரதியார் பாடியபோல, 'தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை' செய்வது தமிழர்களின் பொறுப்பாகும்,” என்று அவர் கூறினார். அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் வீட்டில் தமிழைப் பேசி வளர்க்க வேண்டும் என்றும், அயலகத் தமிழர் அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது முகன்மையானது என்றும் அவர் தெரிவித்தார்.
சிறப்பு நிகழ்வின் முக்கியத் தருணங்கள்
திலகவதி, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றையும் அதன் ஆராய்ச்சி மையமாக உருவாக்கப்பட்ட மையப்பணிகளையும் விவரித்தார். சங்க இலக்கியப் பணிகள், அறிவியல்-வாழ்வியல் களஞ்சியப் பணிகளில் அவர் வெளிப்படுத்திய பங்களிப்புகள் தமிழின் வளத்தை மேலும் செழுமைப்படுத்தியவை. இவர் தம் துறை சார்ந்த பணிகள் மட்டுமில்லாமல் முதல் துணைவேந்தர் முனைவர் வ. அய். சுப்பிரமணியத்தின் சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம், அறிவியல் களஞ்சியம், வாழ்வியல் களஞ்சியம், நாடகக் களஞ்சியம் எனப் பல திட்டங்களுக்கும் பங்கு செலுத்தி இருக்கிறார்.
அமெரிக்காவில் பல தமிழ்ப் பள்ளிகள், வைதேகி ஹெர்பெர்ட்டின் எண்ணக் கனவுப்படி ஹார்வார்ட் தமிழ் இருக்கை, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பணிகள் எனத் தமிழ் நிலையாக வளர்கிறது என்று அவர் பாராட்டினார்.
தொடரும் தமிழ்ப்பணி
தமிழின் வளர்ச்சிக்குத் தம்மையே அர்ப்பணித்த முனைவர் திலகவதி, சங்க இலக்கியப் பொருட்களஞ்சியப் பணிகளில் அசைக்கமுடியாத பங்களிப்புகளை வழங்கி வருகிறார். உலகத் தமிழர் ஒற்றுமையைக் காக்க, ஒரு தமிழர் உலக வங்கியின் தேவை குறித்து சொல்லியதாகவும், தமிழ் ஆர்வலர்கள் தங்களது ஆற்றல்களை வளர்க்க வேண்டியதன் தேவையையும் அவர் எடுத்துரைத்தார். தமிழின் பொருளாதார, சமூக அறிவியல் துறைகளின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு மற்றும் குழந்தைகள் கல்வி ஆகியவற்றையும் அவர் வலியுறுத்தி வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் முத்திரை பதிக்கும் விதத்தில் எழுத வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார்.
அயலக நாடுகள் பல சென்று தமிழ்ச் சொற்பொழிவு புரிந்த அனுபவத்தில் அமெரிக்கத் தமிழர்கள் தமிழ் வளர்ப்பில் சிறந்து விளங்குவதாகவும் அமெரிக்காவின் எல்லா ஊர்களிலும் தமிழ்ப் பள்ளிகள், தமிழ் இருக்கை, சங்க இலக்கியப் பரவல் பணி, அறிவியல் புனைவு எழுத்தில் சிறந்து விளங்கும் ராம் பிரசாத்தின் பங்கு, வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் பலரின் தமிழ்ப் பணி, பல தமிழ் அமைப்புகளை ஒன்றிணைத்துத் தமிழ் பரப்பும் வட அமெரிக்கத் தமிழ்ப் பேரவையென அமெரிக்க வாழ் தமிழர்களின் தமிழ்ப்பற்று போற்றத்தக்கதென நெகிழ்ந்தார். தமிழ்ச் சங்கங்கள்மூலம் தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், மரபுக் கலைப் பயிற்சி எனத் தமிழ் நன்றாக வளர்கிறது என்று மகிழ்ச்சி அடைந்தார். உலக அளவிலும் தாய்வான், மலேசியா, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, இலங்கை, கனடா போன்ற பல நாடுகளிலும் தமிழ் வளர்ச்சி வெகுசிறப்பாக இருக்கிறது என்றார்.
முனைவர் திலகவதியின் முயற்சியில் பாரதிதாசனின் 125-ஆவது பிறந்த நாள் விழா, தேசிய ஒருமைப்பாட்டிற்கு மகாபாரதம் என்ற கருத்தரங்கம், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் 200-ஆவது பிறந்ததின விழா ஆகியவை நடைபெற்றிருக்கின்றன; இவையல்லாமல், உலகத் தமிழர் அறிவியல் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, கட்டடத்துறை மூலம் தமிழ் இலக்கியப் பண்பாடு மரபுகளை உலகுக்கு அறியத்தருதல், சுதந்திரப் போரில் தமிழர்களின் அர்ப்பணிப்பு, மகளிரின் வீரப் புரட்சியெனப் பல வகைகளில் தனது தமிழ்ப் பணியை இன்றும் தொடர்கிறார்.
தொலை நோக்குச் சிந்தனைகள்
இன்றைய பிள்ளைகளுக்குத் தமிழ் சென்று சேர, நாம் பல புதிய உத்திகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றார். உலகில் உள்ள தமிழர்களின் ஒற்றுமை ஓங்க அனைத்துத் தமிழர்களையும் ஒரே குடையில் கொண்டு வரும் ஓர் அமைப்பு உருவாக்க வேண்டும்; அதற்கு நாம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். தமிழ் எழுத்தாளர்கள் தம் எழுத்தில் உலகை வியக்க வைக்கும் படைப்புகளை அளிக்க வேண்டும். அறிவியல் புனைவில் எழுதுவது போல் பெண் எழுச்சி, குழந்தைகள் வளர்ப்பு, மரபு இலக்கியம், தமிழ் உணவு, மருத்துவம் என எல்லாவற்றையும் பற்றி எழுத வேண்டும். உலகில் எந்த மூலையில் எவரும் தமிழ்க் கல்வி, பட்டப்படிப்பு, தொடர பல்கலைக் கழகங்கள் தொலைதூர அயலக மாணவர்கள் பயன்பெறும் விதத்தில் திட்டங்கள் பல புதிதாக அறிமுகப்படுத்தப் பட வேண்டும். அமெரிக்காவில் தமிழ் மரபு ஆவண அருங்காச்சியகம் ஒன்றும் அமைய நாம் முயல வேண்டும் என்று பல தொலை நோக்குச் சிந்தனைகளைப் பகிர்ந்தார்.
முனைவர் க. திலகவதியின் இந்த அமெரிக்கப் பயணம், தமிழ் வளர்ச்சியின் அடையாளமாகவும், உலகத் தமிழர்களின் பண்பாட்டுத் தொண்டுகளை மேலும் ஊக்குவிக்கும் விதமாகவும் அமைந்தது. திலகவதியை வட அமெரிக்க வரவேற்பறை நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நேர்காணல் செய்ததை வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் மன்றம் பெருமையாகக் கருதி நன்றி நவில்கிறது. இவரது நேர்காணலின் முழுக் காணொளிக்கான இணைப்பைக் கீழேக் காணலாம்:
https://www.facebook.com/share/v/18wYxdcUH4/?mibextid=oFDknk
- நமது செய்தியாளர் முருகவேலு வைத்தியநாதன்
Advertisement