/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரியில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கத் தலைவர்
/
மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரியில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கத் தலைவர்
மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரியில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கத் தலைவர்
மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரியில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கத் தலைவர்
ஜன 05, 2025

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கத் (FeTNA)தலைவர் விஜய் மணிவேல் மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரி நிகழ்ச்சியில் 'தமிழ் மொழி - இலக்கியம் - கலைகளின் வளர்ச்சி; தொழில் முனைவோர்களை உருவாக்குவது ஆகிய பணி எங்களது அறம் ' என்று மாணவர்களிடம் உரையாற்றினார். மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரியில், முன்னாள் மாணவர்க்குப் பாராட்டு விழா நடைபெற்றது.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளோடு விழா தொடங்கியது. விழாவிற்கு கல்லூரி முதல்வர், முனைவர் ம.புவனேஸ்வரன் தலைமை தாங்கினார். அவர் தம் உரையில், 'நம் கல்லூரியின் முன்னாள் மாணவர் விஜய் மணிவேல் அடைந்த உயர்வைப் பாருங்கள். அவரின் கருத்துகளைக் கேட்டு நீங்களும் அந்த உயரத்தை அடையவேண்டும். இந்தக் கல்லூரியையும் நீங்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றுகூறினார். அனைத்துத்துறைப் பேராசிரியர்களும் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவினை முன்னாள் மாணவர் சங்கத்தினர் ஒருங்கிணைத்திருந்தனர். கல்லூரியின் முன்னாள் மாணவரும் இன்றைய துணை முதல்வருமான, முனைவர் பெரி.கபிலன் தம் அறிமுகவுரையில், ' தொழில் காரணமாக அமெரிக்கா சென்ற தமிழர் தன் தனித்தன்மையால், உழைப்பால் உயர்ந்திருக்கிறார்; உயர்ந்து வருகிறார். கடின உழைப்பால் கணினித் துறையில் பல சாதனைகள் படைத்து, தமிழராய் இருந்து தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் தொண்டு செய்து, இன்று வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக உயர்ந்திருக்கிறார். அவர் நம் கல்லூரியின் முன்னாள் மாணவர் என்பது சிறப்பு! நமக்குப் பெருமை! அவரைப் பாராட்டுவது நம் கடமை'எனப் பேசினார்.
விழாவில் கலந்து கொண்ட, முனைவர் சா.சுரேஷ்குமார், முனைவர் க.மோகன், முனைவர் அ. சாந்தி, முனைவர் ஹானா தங்கச்சாமி, முனைவர் பி. ரெஜினா தேவி, முனைவர் ச.ராமசுந்தரம், முனைவர் அ. கமலா, முனைவர் அ. தி. செந்தாமரைக் கண்ணன், முனைவர் கு. சுரேஷ்குமார், முனைவர் மணி, முனைவர் சிவக்குமார், முனைவர் வினோலின் முனைவர் சு. ராமர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அலுவலகப் பணியாளர்கள் சார்பாக, கண்காணிப்பாளர் முத்துக்கிருஷ்ணன் கலந்து கொண்டார்.
விழாவில் கலந்து கொண்ட அருப்புக்கோட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஆ. அழகுசெல்வம், ' தமிழ் இலக்கியம் படித்த நான் ஏதேனும் சாதிக்க வேண்டும் என நினைத்து, நாடகம், நாட்டுப்புறக் கலைகள், மரபிசை எனக் கற்று, தனித்திறன்களை வளர்த்துக் கொண்டேன். அதனால், அமெரிக்காவில் நடைபெற்ற பத்தாவது உலகத் தமிழ் மாநாடு மற்றும் FeTNA மாநாட்டிற்கு அழைக்கப் பெற்றேன். தமிழும் கலையும் எனக்கு அந்த வாய்ப்பை வழங்கியது. தொடர்ந்து கொம்பு மரபிசை மையம், அடவு கலைக் குழு, ஐபாட்டி போன்ற அமைப்புகளோடு இணைந்து, 'கலை வழி மொழி, தமிழ் மரபுகளைப் பாதுகாத்து, பயிற்சி அளித்து வளர்த்தல்'என்ற நோக்கில் பணி செய்து வருகிறேன். நமக்கெல்லாம் முன்னுதாரணமாக இருக்கக் கூடிய விஜய்மணிவேலை் போற்றி, மென்மேலும்வளர வாழ்த்தி மகிழ்கிறேன்' என்று பேசினார்.
விழாவின் நிறைவாக, விஜய் மணிவேல் ஏற்புரையைச் சிறப்புரையாக வழங்கினார். 'நான் இந்தக் கல்லூரியில் 95-_-97ஆம் ஆண்டுகளில், எம்.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் (கணினி அறிவியல்) துறையில் படித்தேன். மதுரையைச் சேர்ந்த சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். சுமாராகப் படிக்கக் கூடிய மாணவன்தான். அரியர்ஸ் வச்ச ஸ்டூடன்ட்தான். ஏதோ ஒரு நம்பிக்கையில் படித்தேன். என் ஆசிரியர்கள் என்னைத் தட்டிக் கொடுத்துப் படிக்க வைத்தார்கள்.
' படிப்பை முடித்ததும் அடுத்து என்ன செய்வதென்று யோசிக்கும் பொழுது பயம் இருந்தது. ஒரு வழியாக நானும் என் நண்பர்களும் சேர்ந்து பெங்களூர் சென்றோம். Defence (பாதுகாப்பு) துறையில் கணினிப் பிரிவில் வேலை பார்த்தோம். புராஜெக்ட் வேலைதான். அங்கு வேலை செய்யும் போது அப்துல்கலாம், பொன்ராஜ் ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் நிறைய ஆலோசனைகள் கொடுத்தாங்க. கோச்சிங் கொடுத்தாங்க. வேலை நேரம் போக வீட்டுக்கு வரச்சொல்லிப் பேசுவாங்க. நிறைய வழிகாட்டுனாங்க. வேலை பார்த்துக் கிட்டே படிக்கவும் செய்தோம். படிச்சுகிட்டு இருக்கிறப்பவே ஸ்வீடன் மற்றும் அமெரிக்காவில் இருந்து வாய்ப்பு வந்தது. அந்த நேரத்துலதான் என்னோட அரியர்ஸ் பேப்பரை முடிச்சேன்.
' அமெரிக்கா போனப்ப ஆரம்பத்துல ஒரு மாதிரியா இருந்துச்சு. ஆனாலும் பொழைக்கனும். ஜெயிக்கனும்னு ஒரு வேகம் வந்துச்சு. கடுமையா உழைக்க ஆரம்பிச்சேன். மாணவர்கள் உங்களுக்காகச் சொல்றேன். நீங்க உங்களை மட்டும் நம்பி வேலை செய்யுங்கள். ஆங்கில மொழி ஒரு சவாலாக இருக்கும். அது ஒரு பிரச்சினை இல்லை. பேசிப் பேசி கத்துக்கலாம்.
' அதேமாதிரி வெளி நாடுகளுக்குப் போன பிறகுதான் தமிழின் சிறப்புத் தெரியும். ஏன்னா நம்ம மொழி பேச ஆள் இருக்க மாட்டாங்க. நம்ம ஊருக்காரவுங்களப் பார்த்தாதான் பேசமுடியும். அதுக்கப்புறமா தமிழ் மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் வேலைசெய்ய ஆரம்பிச்சேன். அமெரிக்கா முழுக்க இருக்கிற தமிழ்ச் சங்கங்களோட சேர்ந்து வேலை செய்ய ஆரம்பிச்சேன். பிறக்கும் குழந்தைகள் தமிழ் பேச வாய்ப்பு இல்லை. பெற்றோர்களுக்கும் வேலை மற்றும் வாழ்க்கை முறையில ஆங்கிலம்தான் இருக்கும்.
' அதுக்காக தமிழ் மொழி, கலை, இலக்கியம், மரபுக்கலைகள் இது எல்லாத்துக்கும் உதவிகள் செய்யனும். அதோட, தமிழ் மக்களுக்கு அவசர உதவிகள், பள்ளிக்கல்வி, தமிழ் வகுப்புகள் தொடங்குவது, பெண்களுக்குக் குடும்பத்தில் சங்கடமான சூழல்கள்ல உதவுவது, திடீர் மரணங்கள் ஏற்படுற சூழல் வர்றப்ப உதவுவது இப்படி நிறைய வேலைகள் நண்பர்களோடு சேர்ந்து செய்தோம். அமைப்புக்காக நிறைய வேலை செஞ்சோம்.
' FeTNA- க்குள்ள பெரிய மாற்றங்களை உருவாக்கினோம். Infrastructure உருவாக்கினோம். நிறைய தொழில் முனைவோர் மாநாடுகள் நடத்தினோம். எப்பவுமே ஒருத்தருக்கு கீழ வேலை செய்யாம, தொழில் முனைவோர்களை உருவாக்கிப் பலருக்கும் வேலை கொடுக்கும் நிலையை உருவாக்குவது நோக்கம். அதுக்காக இளைய தலைமுறை ஆர்வலர்களைக் கண்டுபிடிச்சு தொழில் முனைவோர் ஆக்கும் வேலைத்திட்டத்தைச் செய்துகிட்டு இருக்கோம்.
' இந்த முறை தொழில் முனைவோர் மாநாடு, வரும் சனவரி 18ம்தேதி, மதுரையில் முதல் முறையாக நடக்க இருக்குது. ஆர்வமுள்ள மாணவர்களைக் கண்டுபிடிச்சு, மாநாட்டில் பங்கேற்க வைப்பது, தொழில் முனைவோரோடு இணைந்து தொழில் செய்ய வைப்பது எங்க திட்டம். நடக்க இருக்குற மாநாட்டுல நீங்க வந்து கலந்துக்கனும். தேடல் மற்றும் தன்னம்பிக்கையோடகடின உழைப்பைப் போடுங்க. வாய்ப்புகள சரியாப் பயன்படுத்திக்கங்க. வெற்றி பெறுங்க.
' வேற எந்த ஊருக்கும் இல்லாத சிறப்பு மதுரைக்கு இருக்கு. நாமளும் வாழனும், எல்லாரையும் வாழ வைக்கனும்ங்கிறதுதான் அது. அதான் இந்த மண்ணோடு அறம். Ethics. அதுதான் என்னைய இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கு. கல்விக்கு உதவனும் தொழில் முனைவோருக்கு உதவி செய்யனும்ங்கிற பேரார்வத்தோடு வந்திருக்கிறேன்.. எல்லாரும் வாங்க. என்று கூறி தன் உரையை நிறைவு செய்தார். பேராசிரியர் தி. ஜ.அகமது நன்றி கூறினார். செய்திப் பகிர்வு: முனைவர் அழகு அண்ணாவி
- நமது செய்தியாளர் முருகவேலு வைத்தியநாதன்
Advertisement