
அமெரிக்காவில் சொல்லி வைத்தது போல சாலைகளின் இருபுறமும் வழிநெடுக பசுமைப் புல்வெளிகள். மரங்களும் தோப்புகளும் குளிர்காலம் ஆரம்பிக்கும்போது நிறம் மாறுகின்றன. அதன் இலைகள் செம்பழுப்பாகி, பிறகு உதிர்ந்து விடுகின்றன.
அடர்ந்த காடுகள்! அகலப் பாதைகள்! மரங்கள் வளைந்து வந்து சாலைகளை வம்புக்கிழுக்காமல் வலை அடித்திருக்கிறார்கள்.
அங்குள்ள மனிதர்கள் போலவே மரங்களும்! அவரவர்கள் வழியில் அவரவர்கள் தம் வேலையைப் பார்த்துப் போய்க்கொண்டிருக்க வேண்டும்! வாகனங்கள் கோபித்துக்கொண்டு போய் மரங்களை முட்டக்கூடாது! மரங்களும் இந்தப் பக்கம் சாயக்கூடாது!
“இவையெல்லாம் பெரும்பாலும் ஃபாரெஸ்ட்கள்! அவற்றை அரசு பொக்கிஷமாய் பாதுகாக்கிறது. உள்ளே நிறைய வனவிலங்குகள் உண்டு.
'மான்களும் அதிகம்! அவை விவரமில்லாமல் ரோடுக்கு வந்து அடிபட்டுவிடக் கூடாது என்றுதான் இந்த கம்பி வலை!'மாப்ஸ் விஜய் சொல்ல, சரவணன், “மானை இடித்து விபத்து பண்ணினால் இங்கு பெருங்குற்றம்.” என்கிறார்.
ஆனால் இதில் என்ன வினோதம் என்றால் - அக்டோபர் - நவம்பர் மாதங்களில் மான் வேட்டைக்கு அரசு அனுமதி தருகிறது. ஒருவருக்கு ஒரு மானைச் சுடத்தான் அனுமதி!
அட..! வருடம் முழுக்க போற்றிப் பாதுகாப்பது சுடத்தானா...?நாம் மானை உபத்திரவிக்கக் கூடாது, சரி , ஆனால் அவைகள் நம்மை?
வாஷிங்டன் அருகே வர்ஜீனியாவில் மகள் அபர்ணா குடும்பம் வசிக்கிறது. சமீபத்தில் அபர்ணா தன் தோழி சங்கீதாவுடன் வழக்கம் போல நடக்கச் செல்லும் போது திடீரென ராட்ஷஸ மான் ஒன்று சாலையை குறுக்கிட--
எதிரே வந்த கார் கட்டுப்படுத்த முடியாமல் அதை முட்ட ..
தட்டித் தூக்கி எறியப்பட்ட மான் தேமே என நடந்துக் கொண்டிருந்தவர்களின் மேல் விழுந்து எல்லாம் கண நேரத்தில் நடந்து விட்டது.
அபர்ணா கீரலுடன் தப்ப, சங்கீதா நிலை குலைந்து , விழுந்து மண்டை அடிபட்டு, நினைவிழந்து எல்லோருக்கும் பதற்றம். பரிதவிப்பு!
உடன் மருத்துவமனை! 4 நாள் தீவிர சிகிச்சை!
பொதுவாக அந்த குடியிருப்பு பகுதிகளில் மான்கள் வருவதில்லை. அதனால் அது மனித குற்றமாகவில்லை. விபத்தான அந்த மான் அங்கேயே துடிதுடித்து அவுட்! பெரும் பிரளயத்துக்குப் பின் சங்கீதாவின் உயிர் மீட்டெடுக்கப்பட்டது.
எல்லாம் தெய்வாதீனம்!
- என். சி.மோகன்தாஸ் with அபர்ணா
Advertisement